டுடன்காமுன் (இளவயது) |
வரலாறு விசித்திரமானது. யாரை வரலாற்றிலிருந்து துடைத்தொழிக்க வேண்டுமெனச் சிலர் விரும்பினார்களோ அதற்கு நேர்மாறாக நடப்பதுண்டு. தனக்குப் பிடிக்காதவர்களை இருந்த இடம் தெரியாமல் நசுக்கி அழித்து ஒழிக்க வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட ஆட்சியாளர்கள் உண்டு. ஆனால், யாரை மறைக்க விரும்பினார்களோ அவர்கள் ஒன்றுமே செய்யாமல் புதுவரலாறு படைப்பதுண்டு. சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து!... ஆசான் ஜெமோவின் வார்த்தைகளில் சொன்னால், “வீழ்வதனூடாக எழுந்தவர்கள் வரலாற்றில் எப்போதுமுண்டு”.
எகிப்திய வரலாற்றில் அப்படிப்பட்ட அடையாள அழிப்புக்கு ஆளான மாமன்னர்களில் ஒருவர் டுடன்காமுன். அவரது அப்பாவுக்கும் அதே கதிதான். ஆனால், மற்ற எல்லாரைக் காட்டிலும் அவர்களே இன்று ஆக அதிகமாகப் பேசப்படுகின்றனர். டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டன், பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்திலிருந்த பழைய சமயத்தைக் கைவிட்டு ஆதவனைக் கடவுளாக்கித் திடீரென ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். எண்ணற்ற கடவுள்களை வணங்கும் எகிப்தின் பாரம்பரியப் பழக்கத்தைக் கைவிட்டு, ஆட்டன் என்னும் ஒற்றைச் சூரியக் கடவுளை வணங்கும் புதிய சமயத்தை உருவாக்கினார்.
சூரியக் கடவுளைக் குடும்பத்தோடு வழிபடும் அக்கினாட்டன் |
அமுன் என்பது எகிப்தியக் கடவுள்களின் அரசன். “அமுனுக்கு பதிலாக ஆட்டனை வணங்குங்கள்” என்றார் அக்கினாட்டன். புதிய சமயத்தைத் தோற்றுவிக்கும்முன் அவரது பூர்வாசிரமப் பெயர், நாலாம் அமென்ஹோடெப் (Amenhotep IV). தாம் ஆட்சிக்குவந்த நாலைந்து ஆண்டுகளிலேயே இந்த மாற்றத்தைத் தொடங்கிவிட்டார் அவர். உலக வரலாற்றிலேயே, ஒற்றைக் கடவுள் வழிபாட்டு முறையை முதலில் அறிமுகம் செய்தவர் அவராகத்தான் இருக்கமுடியும் என்று வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். அதன் காரணமாக பழைய சமயத் தலைவர்களின் வெறுப்புக்கு ஆளானவர்.
டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டன் |
அவர் உயிரோடு இருந்தபோது, வேறு வழியின்றிப் பொருமிக்கொண்டும் மனத்துக்குள் புழுங்கிக்கொண்டும் இருந்த சமயத் தலைவர்கள், மன்னர் மறைந்ததும் மீண்டும் பழைய சமயத்துக்குத் திரும்பினர். 9 வயதில் மன்னரான டுடன்காமுனைப் பழைய சமயத்தைத் தழுவச் செய்தனர். அக்கினாட்டனைப் போல், டுடன்காட்டன் என்று பூர்விகத்தில் இருந்த பெயரை, “அமுன் கடவுளின் அவதாரம்” அதாவது “வாழும் அமுன் கடவுள்” என்னும் பொருள்பட, டுடன்காமுன் என மறுநாமகரணம் செய்வித்தனர்.
17 முதல் 19 வயதுக்குள் மாண்டுபோன டுடன்காமுன், பழைய சமயத்துக்கு மாறினாலும், அவரை ஏற்றுக்கொள்ளவோ மன்னிக்கவோ சமயத் தலைவர்களுக்கு மனமில்லை. சமயத் தலைவர்களைச் சார்ந்து வாழ்ந்த பிற்கால மாமன்னர்களுக்கோ, அதை எதிர்க்கத் துணிவில்லை. தன்னுடைய தந்தையிடமிருந்து தம்மைத் தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள டுடன்காமுன் செய்த முயற்சிகள், பலனளிக்கவில்லை. கி.மு. 1323இல் டுடன்காமுன் மறைந்ததும், சாத்தியமுள்ள எல்லா வழிகளிலும், தந்தை அக்கினாட்டனின் பெயரைப்போல் இவரது பெயரும் அழிக்கப்பட்டது.
அப்படி ஒரு மாமன்னர் இருந்ததே, எகிப்தியவியல் வல்லுநர்களுக்குத் தெரியாத அளவுக்குத் தடயங்கள் அழிக்கப்பட்டிருந்தன. டுடன்காமுனின் தந்தை உருவாக்கிய புதிய நகரமான அமர்னாவும் அழிக்கப்பட்டது. அங்கிருந்த கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு, அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள், மற்ற கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. அவ்வளவு பெரிய நகரில் இன்று எஞ்சியிருப்பது ஒன்றே கால் தூண் மட்டும்தான். ஒரு காலத்தில் அகண்ட எகிப்தின் அதிகார மையமாக விளங்கிய அமர்னா, இன்று ஆளரவமின்றிக் கிடக்கிறது. ஹம்பி சிதைவுகளைப் போல... கைரோவுக்கும் லக்ஸோருக்கும் இடையிலுள்ள அமர்னா, கி.மு. 1347 முதல் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் பயன்பாட்டில் இருந்தது என்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு.
மன்னர் அக்கினாட்டன் மறைந்ததுமே, அந்த மாபெரும் நகரம் கைவிடப்பட்டு பாலைவன மணலால் மூடி மறைக்கப்பட்டு மறக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு வேறு குடியேற்றம் ஏதும் பெரிதாக நிகழவில்லை. அதனால், அக்கால எகிப்தியர்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய சித்திரத்தை அறிந்துகொள்ள, இன்றளவும் தொல்லியல் துறையினருக்கு மிக முக்கியமான அரிய தடயங்களை வழங்கிவருகிறது, அமர்னா தொல்லியல் தளம். மற்ற இடங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற குடியேற்றங்களால் தடயங்கள் அடுக்கடுக்காகப் படிந்து கலந்துவிட்டன. ஆனால், அமர்னா அப்படியில்லை.
தன்னுடைய தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டு, ஆய்வாளர்களுக்காகக் காத்திருந்தது இந்த நகரம். எகிப்தில், இப்படி ஓரிடம் அமைவது அரிதானது. அதிக ஆழமாகக்கூடத் தோண்டத் தேவையில்லை இங்கே. மேலே படிந்துள்ள மணலை அப்புறப்படுத்தினாலே போதும், ஒரு மாபெரும் நகரின் அடித்தளம் எழுந்துவந்துவிடுகிறது அமர்னாவில். சாமானியர்களின் வீடுகள் களிமண் கற்களால் கட்டப்பட்டாலும், ஆட்டனின் திறந்தவெளி ஆலயங்களும் அரச மாளிகைகளும் சுண்ணாம்புக் கற்களாலும் கருங்கற்களாலும் கட்டப்பட்டன அமர்னாவில். சொற்ப காலமே ஜீவித்தாலும் அமர்னா காலம், அமர்னா பாணி என்று தனித்து அடையாளம் காட்டப்படும் அளவுக்கு, அங்கே புத்தாக்கமிக்க கலைகள் வளர்ந்தன. சிற்பங்களாகட்டும் ஓவியங்களாகட்டும், அமர்னா தனக்கென ஒரு தனி சாயலைக் கொண்டிருக்கிறது. அமர்னாவைப் பற்றித் தனியாக, ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு சுவையான விவரங்கள் உள்ளன அந்தத் தலைப்பில்.
அமர்னா காலத்தோடு தொடர்புடைய எல்லா மன்னர்களின் பெயர்களுமே, பதினெட்டாவது சாம்ராஜ்ய மன்னர் வரிசையில் இருந்து அகற்றப்பட்டன.
வரலாற்றில், சுமார் 30 ஆண்டுகள் காணாமற்போயின. ஒரு வெற்றிடம், வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது. அபிடோஸ் (Abydos) என்னுமிடத்திலுள்ள முதலாம் செட்டியின் (Seti I) ஆலயத்தில், பண்டைய எகிப்தைச் சேர்ந்த 76 மாமன்னர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருப்பதை இன்றும் காணமுடியும். நாங்களும் அதைப் பார்த்தோம்.
மாமன்னர் இரண்டாம் ராம்சிஸ் இளவயதில்-மாமன்னர்கள் பெயர்ப் பட்டியலுக்கு எதிரே - அபிடோஸ் |
இளஞ்சிறுவனாக இரண்டாம் ராம்சிஸ் மன்னரும், அருகே அவரது தந்தை முதலாம் செட்டியும், தங்கள் மூதாதையர் சார்பாக இறைவனுக்குப் படையலிடச் செல்லும் புடைப்புச் சிற்பத்துக்கு அருகே, நீண்ட வரிசையில் அந்தப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்தப் பட்டியலில், சில பெயர்கள் வேண்டுமென்றே விடுபட்டிருக்கும். அவற்றுள் ஹட்ஷெப்சுட் மகாராணி, அக்கினாட்டன், டுடன்காமுன், டுட்காமுனுக்குப் பின் அரியணை ஏறிய ஆய் மன்னரின் பெயர்கள் இல்லை. லக்ஸோரில் உள்ள கர்னாக் (Karnak) ஆலயத்திலும் இப்படி 61 மன்னர்களின் பெயர்களைத் தாங்கிய பட்டியல் இருந்திருக்கிறது. அது, சுமார் 200 ஆண்டுகளுக்குமுன், தொல்லியல் ஆர்வலர் ஒருவரால் பெயர்த்து எடுக்கப்பட்டு ஃபிரான்ஸுக்குக் கடத்தப்பட்டுவிட்டது. பாரிஸில் உள்ள லூவர் அரும்பொருளகத்தில், இப்போதும் அந்தச் சிதைக்கப்பட்ட பட்டியலைக் காணலாம்.
கர்னாக் ஆலயம் |
இதுபோல், சொந்த வாரிசுகளே மூதாதையர் பெயரை அழித்தாலும், தந்தை-மகன் விட்டுச் சென்ற தடயங்களைக் காலம் பதிரமாக பாதுகாத்து வைத்திருந்தது. தொல்லியல் ஆய்வாளர்களுக்கு, அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சில தடயங்கள் மூலம், வரலாற்றில் எழுந்துவந்து, நீங்கா இடம்பிடித்த மாமன்னர் டுடன்காமுன்.
1891ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளரான வில்லியம் மேத்யூ ஃபிளிண்டர்ஸ் பெட்ரி, அக்கினாட்டன் உருவாக்கிய புதிய நகரமான அமர்னா இருந்த இடத்தில் அகழாய்வு நடத்தினார். டுடன்காமுன் சிறுபிள்ளையாக இருந்தபோது வாழ்ந்த இடம் அது. அமர்னாவில், அரண்மனை இருந்ததாக ஊகிக்கப்படும் இடத்தில் கிடைத்த சிதைவுகளைச் சல்லடை போட்டு அலசினர் பெட்ரி தலைமையிலான குழுவினர். அக்கால எகிப்தியர்களின் அன்றாட வாழ்வைப் பிரதிபலிக்கும் சில பொருள்கள், அப்போது அகப்பட்டன. சில பொருள்களில், டுடன்காமுன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டார் பெட்ரி.
கர்னாக், லக்ஸோர் போன்ற மாபெரும் ஆலயங்களிலும் டுடன்காமுன் பெயர் அழியாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதிகம் தெரியாத ஒரு மன்னர் இருந்ததை, இந்தத் தடயங்களைக் கொண்டு உறுதிப்படுத்திக்கொண்டார் பெட்ரி. அமர்னாவில் அவருக்கு, டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்ட அடர் நீலநிறப் பீங்கான் முத்திரை மோதிரங்கள் சில கிடைத்திருந்தன. எகிப்தைப் பொறுத்தவரை, எந்தப் பொருளிலும் எந்த இடத்திலும், மாமன்னர்களின் பெயர்கள் சாதாரணமாகப் பொறிக்கப்பட்டிருக்க மாட்டா. அவை, கார்ட்டூஷ் (Cartouche) என்னும் வடிவத்துக்குள் மட்டுமே பொறிக்கப்படும்.
டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்ட தங்க அரியாசனம் |
பக்கவாட்டில் நேராகவும் மேலும் கீழும் அரைவட்ட வடிவமும் கொண்டு, கிடைமட்டக் கோட்டின்மேல் நிற்கும் வடிவம்தான் கார்ட்டூஷ். ஹைரோகிளிஃப்ஸ் என்னும் எகிப்தியச் சித்திர எழுத்துமுறைப்படி, கார்ட்டூஷ் வடிவத்துக்குள் மட்டுமே மாமன்னர்களின் பெயர் எழுதப்படும். சில ஆலயங்களிலும் சிதைவுற்ற அரண்மனைகளிலும் டுடன்காமுனின் பெயர் பொறித்த சில பொருள்கள், பெட்ரிக்குக் கிடைத்தன. ஒரு ஜாடி, ஒரு பெட்டியின் உடைந்த துண்டுகள், மோதிரங்கள் இவற்றிலெல்லாம் டுடன்காமுனின் பெயர் இருந்தது.
லக்ஸோர் ஆலய முகப்பு |
ஆகவே, அமர்னாவுக்கும் இந்த அடையாளம் தெரியாத மன்னருக்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டுமென ஆய்வாளர் பெட்ரி தீர்மானித்தார். எல்லாம் சரி, அந்த மன்னரின் மம்மி எங்கே? அதுதான் கார்ட்டர் கண்டுபிடிப்பதற்காக, தலைநகர் அமர்னாவிலிருந்து சில நூறு கிலோமீட்டர் தெற்கே, மன்னர்களின் பள்ளத்தாக்கில் படுத்துக் கிடக்கிறதே...
இன்றுவரை உலகத் தொல்லியல்துறை வரலாற்றில், ஆக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது டுடன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதற்கு ஈடு இணையே இல்லை. இன்றுவரை அது ஒன்றுதான், நமக்குக் கிட்டத்தட்ட முழுமையாகக் கிடைத்த எகிப்திய மாமன்னரின் கல்லறை. அதுவும், குறைந்தது இரண்டுமுறை கொள்ளையடிக்கப்பட்டதுதான். இருந்தாலும், கொள்ளையர்களிடம் பறிகொடுத்ததுபோக எஞ்சிய பொருள்களே மொத்தம் 5,398. அங்குக் கிடைத்த பொருள்களின் பண மதிப்பும் அவற்றின் தொல்லியல் மதிப்பும், திருவனந்தபுரம் அனந்தன் ஆலயச் செல்வக்குவை போல் கற்பனைக்கும் எட்டாதது.
ஆனால், அதைக் காட்டிலும், 3300 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாமன்னரின் கல்லறையில் என்னென்ன பொருள்கள் வைக்கப்பட்டன? அவை எந்தெந்த நிலையில் வைக்கப்பட்டன? சடங்குரீதியாக அவற்றுக்கு என்ன பொருள்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தது டுடன்காமுனின் கல்லறைதான்.
பிரமிடுகளைக் கொள்ளையடிக்கும் கொள்ளையருக்கு அஞ்சி, மலைச் சரிவுகளில் சுரங்கம் தோண்டி, மன்னர்களைப் புதைக்கும் வழக்கம் இருந்தது. எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தபோதும், சுரங்கக் கல்லறைகளையும் களவாணிகளிடம் இருந்து முழுமையாகக் காப்பாற்ற முடியவில்லை. மாமன்னர்கள் புதைக்கப்பட்ட ஒரு சில நூற்றாண்டுகளுக்குள்ளேயே பெரும்பாலும் அவை சூறையாடப்பட்டன. குறிப்பாக, அரசியல் குழப்பம் நேரும்போது இத்தகைய கொள்ளைகளும் சூறையாடல்களும் அதிகம் நடப்பதுண்டு. இன்றுவரை அதுதானே வழக்கத்திலிருக்கிறது? அரபு வசந்தம் வந்தபோது, கைரோ நகரிலுள்ள அரும்பொருளகமும் தாக்குதலுக்கு உள்ளானது.
பிரமிடைப் போன்ற தோற்றமுள்ள குன்றை உள்ளடக்கிய மன்னர்களின் பள்ளத்தாக்கு |
2011இல் நேர்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது, கைரோ அரும்பொருளகத்திலிருந்த 54 அரும்பொருள்கள் களவுபோயின. 18 அரும்பொருள்கள் சூறையாடப்பட்டுச் சிதைக்கப்பட்டன. இந்தச் செய்தி வெளியானபோது, உண்மையில் நான் இடிந்துபோனேன். மனிதகுலத்தின் ஒப்பற்ற அரும்பொருள்களை உள்ளடக்கியது கைரோ அரும்பொருளகம். அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால், அதை ஈடுகட்டவே முடியாது. களவுபோன அரும்பொருள்களில் மூன்று, டுடன்காமுனின் சிலைகள். அவரது கல்லறையிலிருந்து எடுத்துப் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்கள்.
ஓரிரு ஆண்டுகளில், களவுபோன பெரும்பாலான பொருள்களைக் காவல்துறை மீட்டுவிட்டது என்பது ஆறுதலான தகவல். டுடன்காமுன் சிலைகள் மூன்றும் கைரோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த ஒரு பைக்குள் கண்டெடுக்கப்பட்டன. இருந்தாலும், அப்போது திருடுபோன சில பொருள்கள் போனவை போனவைதான்.
அதேபோல் 2015இல், ஈராக்கின் மோசூல் நகர அரும்பொருளகத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுத்தியலால் அடித்து நொறுக்கும் காட்சியைச் செய்தியில் ஒளிபரப்பியபோது வேதனை, கோபம், இயலாமை என எனக்குள் ஏராள ரணம். தப்பித்தவறிப் பின்னாளில் அந்த அரும்பொருள்களை, எவரும் பழுதுநீக்கி மறு உருவாக்கம் செய்துவிடக்கூடாது என்பதற்காக, பயங்கரவாதிகள் அதைத் துளையிடும் கருவியால் துளைத்துச் சிதைத்த காட்சியை, இப்போது நினைத்தாலும் என்னால் பதறாமல் இருக்கமுடியவில்லை.
எகிப்திய நாகரிகத்துக்கும் முந்திய மெசபடோமிய நாகரிகத்தைச் சேர்ந்த சுமேரிய, அஸிரிய நாகரிகக் காலகட்டத்தைச் சேர்ந்த அரும்பொருள்கள் அன்று தூள் தூளாயின. “பயங்கரவாதிகள் தகர்த்தது சிலைகளை அல்ல, சொந்தப் பாரம்பரியத்தை” என்று ஈராக்கியர்கள் பலர், அன்று கண்ணீரோடு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிப்திய மாமன்னர்களின் கல்லறைகள் கொள்ளையடிக்கப்பட்டதற்குக் காரணம் அரசியலோ திரிக்கப்பட்ட சமய நம்பிக்கையோ அல்ல. பேராசை. மாமன்னர்களின் கல்லறைகள், கீஸாவிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தெற்கிலுள்ள Valley of the Kings எனப்படும் மன்னர்களின் பள்ளத்தாக்கிற்கு இடம் மாறினாலும் அவற்றைப் பாதுகாக்க முடியவில்லை. இன்றுவரை, அந்தப் பள்ளத்தாக்குப் பகுதி தோண்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக, தொல்லியல் ரீதியாக இப்போது அந்த இடம் தோண்டப்படுகிறது என்பதுதான் வேறுபாடு.
எகிப்தில் நவீன அரசுகள் உருவாகத் தொடங்கியபோது, மன்னர்களின் பள்ளத்தாக்கைத் தோண்டிப் புதையல் தேடும் நடவடிக்கை முறைப்படுத்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் தோண்டலாம். உரிய அனுமதியோடு! கிடைக்கும் புதையலை, அதன் மதிப்பைப் பொறுத்து எகிப்திய அரசாங்கத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். உலகெங்கும் உள்ள பணக்காரர்களும் தொல்லியல் ஆர்வலர்களும் எகிப்தை நோக்கிப் படையெடுத்துவந்தனர். ஆனால், மன்னர்களின் பள்ளத்தாக்கில் கல்லறைகளைத் தேடுவது என்பது, வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவதுபோல...
பெயருக்கு ஏற்றாற்போல் மன்னர்களின் பள்ளத்தாக்கு, இரண்டு குன்றுத் தொடர்களுக்கு நடுவில் கோமணம்போல் நீண்டுகிடக்கும். எகிப்தில் மழை பெய்வது அரிதுதான் என்றாலும் எப்போதாவது பெய்யும் பெருமழையால், பள்ளத்தாக்குப் பகுதி ஆறாக மாறிவிடும். குன்றுகளில் இருந்து வழியும் மழைநீர், பள்ளத்தாக்கில் பெருக்கெடுத்துச் சேறும் சகதியும் அடித்துவந்து கல்லறைகள் மேல் படிந்துகொண்டே இருக்கும். குன்றின் கீழ்ப்பகுதிதான் தரமான, உறுதியான கற்களால் ஆன பகுதி. குன்றின் மேற்புறத்துக்குச் செல்லச் செல்லக் கல்லின் தரம் குறையும். ஆகவே, மாமன்னர்களின் கல்லறைகள் பெரும்பாலும் தரமான கற்களைக்கொண்ட கீழ்ப்பகுதியில்தான் குடையப்படும்.
நுழைவாயிலில் இருந்து கல்லறையை நோக்கிக் கீழிறங்கும் சுரங்கப் பாதையில், வெள்ளநீரைப் பிடித்து வைப்பதற்காகவும் திருடர்களை கீழே விழவைப்பதற்காகவும் மிக ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கும். கல்லறைக்குள் தப்பித்தவறி வெள்ளம் புகுந்தால், அது கிணறுபோன்ற இந்தப் பள்ளத்துக்குள் நிறைந்து, மன்னர் புதைக்கப்பட்ட இடத்தை எட்டாமல் தவிர்க்கப்படும். கொள்ளையர்கள் இருட்டில் உள்ளே வந்து, இடறி விழுந்து மாண்ட சம்பவங்களும் இருந்திருக்கவேண்டும். பிறர் உதவியின்றி, அந்தப் பள்ளங்களில் இருந்து வெளியேற இயலாது. முதலாம் செட்டியின் (Seti I) நிலவறைக் கல்லறையில் இப்படி ஒரு கிணற்றைக் கண்டோம் நாங்கள். 8 மீட்டர்வரை ஆழமுள்ள கிணறு அது. இப்போது அதன் மேல் மரப்பாலம் போட்டிருக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், எகிப்தியச் சுரங்கக் கல்லறைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தோண்டுவதென்பது, செலவுமிக்க செயல். பல்லாண்டுப் பொறுமையும் எகிப்தியவியல் பற்றிய ஞானமும் தேவை அதற்கு. எகிப்துமேல் ஆர்வம்கொண்ட செல்வந்தர்கள் பலர், தங்கள் சார்பில் வேறு சிலரை வேலைக்கு அமர்த்தித் தோண்டச் சொல்வது வழக்கம். பொதுவாக, அந்த நபர்கள் தொல்பொருள் வல்லுநர்களாகவே இருப்பர். Egyptian Antiquities Services என்னும் எகிப்தியத் தொல்பொருள் சேவைகள் அமைப்புதான், இவ்வாறு தோண்டுவதற்கு உரிய உரிமங்களை, ஒரு கட்டணம் வசூலித்து வழங்கிவந்தது.
ஒரு தொல்பொருள் ஆய்வாளர், எங்கே தோண்டலாம்? எவ்வளவு காலம் தோண்டலாம்? இதையெல்லாம் அந்த அமைப்புதான் தீர்மானித்தது. பொதுவாக, எகிப்தில் வெளிநாட்டவர் வந்து தொல்பொருள் ஆய்வுகள் செய்வதற்கான பருவம், அக்டோபரில் தொடங்கி பிப்ரவரி அல்லது மார்ச்சில் முடியும். அந்த மாதங்களில்தான் வேலை செய்யத் தகுந்த அளவுக்கு, வெயில் இருக்கும். மாற்ற மாதங்களில் கொதிக்கும். வெளிப்புற வேலை செய்வது, அதுவும் வெள்ளைக்காரர்களுக்குக் கிட்டத்தட்ட முடியாத செயல்தான்.
கட்டணம் செலுத்தி ஒருவர் உரிமம் பெற்ற இடத்தில், எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர் தோண்டக்கூடாது. அவ்வாறு உரிமம் பெற்றவர்களில் ஒருவர், அமெரிக்கச் செல்வந்தரும் வழக்குரைஞருமான தியோடர் டேவிஸ். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், எகிப்தில் சில இடங்களில் கல்லறைப் புதையல் தேடும் உரிமத்தை அவர் பெற்றிருந்தார். 1902 முதல் 1904ஆம் ஆண்டுவரை, மன்னர்களின் பள்ளத்தாக்கில் கல்லறை தேடும் உரிமத்தை டேவிஸ் பெற்றிருந்தார்.
அவருக்குமுன் அங்கே அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இனிமேல் இங்கே ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறினர். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எல்லாரும் தோண்டிச் சலித்து, எடுக்க வேண்டிய எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று அவர்கள் கூறியதை, டேவிஸ் நம்பத் தயாராக இல்லை. கல்லறைக் கொள்ளை மிகப் பரவலாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடந்த நிலையிலும், அவ்வப்போது அதிசயங்கள் நடக்கத்தான் செய்தன. மன்னர்களின் பள்ளத்தாக்கில், டேவிஸ் நடத்திய அகழாய்வில், டுடன்காமுன் தொடர்பான மூன்று அரும்பொருள்கள் கிடைத்தன.
1905க்கும் 1906க்கும் இடைப்பட்ட காலத்தில், டேவிஸின் தலைமைத் தொல்பொருள் ஆய்வாளரான எட்வர்ட் அயேர்டுன் தோண்டிய ஆய்வுக் குழியில், ஒரு பாறையில் சிக்கியிருந்த ஒரு பீங்கான் கிண்ணத்தைக் கண்டெடுத்தார். அதில் டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. பின்னாளில், கார்ட்டர் கண்டுபிடித்த டுடன்காமுன் கல்லறையின் நுழைவாயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள குழியில் கண்டெடுக்கப்பட்டது, இந்தக் கிண்ணம். முதலாம் செட்டி மன்னரின் கல்லறைக்கு அருகில் தோண்டப்பட்டது இந்த ஆய்வுக் குழி.
1907இல் அதே இடத்தில், இன்னும் அதிக நம்பிக்கைதரும் இரண்டாவது தடயம் கிடைத்தது டேவிஸ் குழுவினருக்கு. முத்திரையிடப்பட்ட சுமார் 12 ஜாடிகள் கிடைத்தன ஒரு சிறிய குழிக்குள். அந்த ஜாடிகளுக்குள் டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஜாடிக்குள், உடல்களை மம்மியாக்கம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நேட்ரான் வகை உப்புப் பொதிகள் இருந்தன. மேலும், இறுதிச் சடங்குகளின்போது அணிவிக்கப்படும் உண்மையான மலர்களால் தொடுக்கப்பட்ட ஆரம், மம்மிகளுக்குரிய சிறிய அளவிலான முகக்கவசம், ரொட்டி, உலர்ந்த பழங்கள் உள்ளிட்ட உணவு எச்சம் முதலியவையும் அந்த ஜாடிக்குள் இருந்தன. ஏராளமான உடைந்த பானைத் துண்டுகளும், டுடன்காமுன் பெயர் எழுதப்பட்ட லினன் (Linen) துணித் துண்டுகளும் அங்கே கிடைத்தன. ஆளிச் செடியின் தண்டுகளை ஊறவைத்து உரித்து எடுத்து நெய்யப்படுவது லினன் துணி.
கூடவே, சிறுகுழந்தைகளுக்கு உணவூட்டும்போது சிந்தும் உணவு, மேலே படாமலிருக்கக் கழுத்தில் ஒரு துணி கட்டுவோமே. Bib என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துணிபோன்ற 3 கைக்குட்டைகளும் அங்கே கிடைத்தன. அவற்றுள் ஒன்று, இண்டிகோ சாயம் ஏற்றப்பட்ட நீலக் கைக்குட்டை. அது, மற்ற இரண்டைக் காட்டிலும் சின்னதாக இருந்தது. டுடன்காமுன் சிறுபிள்ளையாக இருந்தபோது அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டுடன்காமுன் பயன்படுத்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஒரு முக்கியமான பொருள். ஏனென்றால், துணிக்குச் சாயம் ஏற்றும் பழக்கம், பழங்கால எகிப்தில் மிக மிக அரிது. பருத்தித் துணியைப்போல் லினன் துணியில் சாயம் எளிதில் ஏறாது. ஆகவே, அந்த நீலச்சாயம் தோய்த்த துணி, முக்கியமான ஓர் அரும்பொருளாகக் கருதப்படுகிறது.
தங்கம், அருமணிகள் என எதிர்பார்த்த ஏதும் கிடைக்காத ஏமாற்றத்தில், அவை அனைத்தையும் நியூயார்க்கிலுள்ள மெட்ரோபாலிட்டன் அரும்பொருளகத்துக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார் டேவிஸ். பிற்காலத்தில், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்திய தொல்லியலாளர்கள், அந்தப் பொருள்கள் எல்லாமே டுடன்காமுனின் மம்மியாக்கத்தில் பயன்படுத்தியதுபோக எஞ்சிய பொருள்கள் என்பதைக் கண்டுபிடித்தனர். டுடன்காமுனின் ஈமச் சடங்குகளுக்குப் பிறகு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் எஞ்சிய பொருள்களும், அவற்றில் கலந்திருந்தன. முதலாம் செட்டி, டுடன்காமுனுக்குப் பின்னால் வந்த மன்னர். பின்னாளில், அவரது கல்லறை குடையப்படும் இடத்திற்கு அருகே, எஞ்சிய பொருள்களைப் புதைத்து வைத்தனர்.
மம்மியாக்க நடைமுறையில் எஞ்சும் பொருள்களைக் குப்பையில் வீசாமல், அவற்றை முறையாக ஒரு மட்பாண்டத்திலோ ஜாடியிலோ வைத்து, மண்ணில் புதைக்கும் வழக்கம் அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. டேவிஸ் கண்டுபிடித்த குழியில் காணப்பட்ட ஜாடிக்குள் இருந்த முக்கியப் பொருள், நேட்ரான் உப்பு. மூளை, ஈரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் சில அகற்றப்பட்ட பிறகு, மம்மியாக்கப்படும் சடலம், இந்த உப்புக்குள்தான் பொதிந்து வைக்கப்படும். சடலத்திலுள்ள ஈரப்பதத்தை, அந்த உப்பு உறிஞ்சி எடுத்துவிடும். அந்த உப்பு தவிர, மரத்தூளும் இருந்தது ஜாடிகளுக்குள். மம்மியாக்கம் செய்யும்போது, உடல் சுக்காய் உலர்ந்து வற்றிச் சுருங்கி உட்குழியும். அந்த இடத்தை, மரத்தூள் பொதிகளால் நிரப்பி நிமிர்த்துவதுண்டு.
1909இல் டேவிஸ் குழுவினர், டுடன்காமுன் தொடர்பான மூன்றாவது தடயத்தைக் கண்டுபிடித்தனர். முற்றுப்பெறாத ஒரு சிறிய சுரங்கக் கல்லறை அது. அங்கே, சின்னச் சின்ன உருவ பொம்மைகளோடு டுடன்காமுன் பெயர் பொறிக்கப்பட்ட தங்கச் சுருள்கள் சிலவும் கிடைத்தன. அதுதான், தொல்லியலாளர்கள் தேடிக்கொண்டிருக்கும் டுடன்காமுனின் கல்லறை என்று முடிவுகட்டிவிட்டார் டேவிஸ். அதுபற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்ட டேவிஸ், “மன்னர்களின் பள்ளத்தாக்கில் இனி ஒன்றும் இல்லை” என்றே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டார். உண்மையில் அவர் டுடன்காமுன் கல்லறையை மிகவும் நெருங்கியிருந்தார்.
இந்தத் தடயங்கள் கிடைப்பதுவரை, மற்றவர்கள் சொன்னதை எப்படி டேவிஸ் நம்பவில்லையோ, அதேபோல் இப்போது சின்னஞ்சிறிய ஒரு கல்லறையை, டுடன்காமுன் கல்லறை என்று டேவிஸ் முடிவுகட்டியதை, நமது கதாநாயகன் கார்ட்டர் நம்பவில்லை. டேவிஸுக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன், மன்னர்களின் பள்ளத்தாக்கை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளரும் இத்தாலியத் துணிகரப் பயணியுமான பெல்ஸோனியும் (Belzoni) இதேபோல் சொல்லியதை நினைவுகூர்கிறார் கார்ட்டர்.
டுடன்காமுனைத் தேடிக் கண்டுபிடிக்க உறுதி பூண்டார் கார்ட்டர். இந்த இடத்தில் நாம், நமது கதாநாயகர் ஹாவர்ட் கார்ட்டரை (Howard Carter) அறிமுகம் செய்துகொள்வோம். லண்டனில், 1874ஆம் ஆண்டில் பிறந்தவர் கார்ட்டர். 17 வயதில் அவர் எகிப்துக்குச் சென்றார். ஓவியராகவும் கட்டட வரைவாளராகவும் (Draftsman) பணிபுரிந்த கார்ட்டர், நாளடைவில் எகிப்தியத் தொல்லியல் துறையிலும் ஆர்வம்காட்டத் தொடங்கினார்.
கல்லறை தோண்டிப் புதையல் தேடுவதில், நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டார். மன்னர்களின் பள்ளத்தாக்கில் அவர், கண்காணிப்பாளர் பொறுப்பை 1899இல் ஏற்றார். அகழாய்வுப் பணிகளை மேற்பார்வையிடுவது, தொல்லியல் தலங்களைச் சீரமைப்பது, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளுக்குள் மின்விளக்குகள் அமைப்பது, கல்லறைகளைப் பாதுகாக்க அவற்றுக்கு இரும்புக் கிராதிக் கதவுகள் நிர்மாணிப்பது-முதலியவை, அவரது பணிகளில் அடங்கும்.
அமெரிக்கர் டேவிஸின் அகழாய்வுப் பணிகளை மேற்பார்வையிட நமது கார்ட்டர் உதவியிருக்கிறார். இருப்பினும், 1904ஆம் ஆண்டில் அவர், கோணல் பிரமிடு உள்ள சக்காரா வட்டாரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், டேவிஸுடன் பணிபுரிவது நின்றுபோகிறது. கார்ட்டரைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போது, அவர் ஒரு முன்கோபக்காரர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஹாவர்ட் கார்ட்டரும் பிரபு கார்னர்வானும். படம் - எகிப்தியத் தொல்லியல் துறை |
மன்னர்களின் பள்ளத்தாக்கைப் பார்வையிடவந்த சுற்றுப் பயணிகளோடு ஏற்பட்ட ஒரு பூசலின் காரணமாக, அவர் தமது வேலையை இழந்தார். ஓவியம் வரையும் திறன் இருந்ததால், அரும்பொருள்களையும் தொல்லியல் தலங்களையும் வரைந்து பயணிகளிடம் விற்று, நாளைக் கடத்தினார். அரும்பொருள்கள் விற்பனை செய்யப்படும்போது, அவை உண்மையானவைதானா என்பதைச் சோதித்துச் சொல்வதில் கைதேர்ந்தவர் கார்ட்டர். ஒரு பொருளைத் தொலைவிலிருந்து பார்த்தே, அது உண்மையானதா போலியானதா என்பதைச் சொல்லிவிடுவாராம். எல்லாராலும் இயல்வதல்ல அது. அது எப்படி என்றால் அப்படித்தான்!
மால்கம் கிளாட்வெல் (Malcolm Gladwell) எழுதிய பிளிங்க் (Blink) என்னும் நூலின் முதல் அத்தியாயமே, தொல்லியல், கலை, வரலாற்று நிபுணர்களின் இந்த ஆற்றலைப் பற்றித்தான் பேசுகிறது. கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு பளிங்குச் சிலையை 10 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கவிருந்த கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜே.பால் கெட்டி அரும்பொருளகம் (J. Paul Getty Museum), பல நிபுணர்களைக் கொண்டு அந்தச் சிலையைச் சோதிக்கச் செய்தது. கௌரோஸ் (Kouros) என்னும் வகையைச் சேர்ந்தது அந்தச் சிலை. இளம் ஆடவர் ஒருவரின் நிர்வாணக் கோலத்தில் வடிக்கப்பட்ட அத்தகைய சிலைகள், மொத்தமே உலகில் 200 மட்டும்தான் உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை, உடைந்து மூளியானவை. இது, கிட்டத்தட்ட முழுமையான சிலை.
சிலை வடிக்கப்பட்ட பளிங்குக் கல்லின் தன்மையைச் சோதிக்க ஒரு மண்ணியல் நிபுணரை (Geologist) அமர்த்தியது அரும்பொருளகம். அவரும் இரண்டு நாள்கள், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு அங்குலம் அங்குலமாகச் சிலையைச் சோதித்துப் பார்த்துப் பச்சைக் கொடி காட்டிவிட்டார். இதேபோன்ற மற்ற சிலைகள், எந்தப் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டனவோ அதே பளிங்குக் கல்தான் இதுவும் என்று உறுதிப்படுத்தினார் அவர். நிம்மதியடைந்த அரும்பொருளக நிர்வாகம், சிலை இதற்குமுன் யாரிடம் இருந்தது என்பதன் பூர்வாசிரமத்தையும் தேடித் தெரிந்துகொண்டது.
இப்படிப் பலகட்டச் சோதனைக்குப் பிறகுதான், சிலை வாங்கப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னரே, இத்தாலியக் கலை வரலாற்று ஆர்வலர் ஒருவர் இந்தச் சிலையில் “என்னவோ சரியில்லை” என்று கொளுத்திப் போட்டிருந்தார். அடுத்து, கிரேக்கச் சிற்பங்கள் பற்றி அபார ஞானமுள்ள நிபுணர் ஒருவர், சிலையைப் பார்வையிட அரும்பொருளகம் ஏற்பாடு செய்தது. சிலையைப் பெரும் பணம் கொடுத்து வாங்கவிருப்பதாகக் கூறிக்கொண்டே, அரும்பொருளக அதிகாரி ஒருவர், சிலையைப் போர்த்தியிருந்த துணியை அகற்றிய உடனேயே, “இந்த முடிவுக்காக நான் வருந்துகிறேன்” என்று கூறிவிட்டாராம்.
இதேபோல், நியூயார்க் மெட்ரோபாலிட்டன் அரும்பொருளகத்தைச் சேர்ந்த முன்னாள் இயக்குநர் ஒருவரும், சிலையைப் பார்த்த அடுத்த விநாடியே “ அடடே.. புத்தம் புதிதாய் இருக்கிறதே சிலை” என்று கூவிவிட்டாராம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஒரு சிலையைப் பார்த்து இப்படிச் சொன்னால், அதைக் காட்டிய அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்? “புதிய பளிங்குச் சிலையை ஸ்டார்பக்ஸ் காப்பிக்குள் முக்கி எடுத்தமாதிரி இருக்கிறது இந்தச் சிலை” என்று சொன்னாராம் அவர்.
பயந்துபோன கெட்டி அரும்பொருளக நிர்வாகம், எழில் மிக்க ஏதென்ஸ் நகருக்கே சிலையை அனுப்பி, கிரேக்கத்தின் மூத்த சிலை நிபுணர்களைக் கூட்டி ஒரு கருத்தரங்கே நடத்தியதாம். கிட்டத்தட்ட அந்த நிபுணர்கள் அனைவருமே சொன்னது, இது போலிச் சிலை! “மண்ணுக்குள் புதைந்து கிடந்த பல சிலைகளைப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறோம், இந்தப் பளிங்குச் சிலை ஒரு நாள் கூட மண்ணில் புதைந்து கிடந்திருக்க முடியாது” என்று. இன்னொரு நிபுணர், “தமக்கும் சிலைக்கும் இடையே ஏதோ கண்ணாடி போன்ற தடுப்பு இருப்பதாகத் தோன்றியது” என்றார்.
இவ்வளவு சந்தேகங்கள் இருந்தும் பொதுமக்களை ஈர்ப்பதற்காக, கெட்டி அரும்பொருளகம் கடைசியில் பளிங்குச் சிலையைப் பார்வைக்கு வைத்தே விட்டது. ஆனால், நாளடைவில் சிலையின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் வெவ்வேறு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. சிலையைப் பற்றி 1952இல் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தில் இருந்த அஞ்சல் குறியீட்டு எண், 1972இல்தான் புழக்கத்துக்கே வந்ததாம். 1955இல் எழுதப்பட்ட மற்றொரு கடிதம் குறிப்பிடும் ஒரு வங்கிக் கணக்கு, 1963 வரை திறக்கப்படவே இல்லை.
அப்புறம், கௌரோஸ் சிலை ஒரு தனிப்பட்ட பாணியைச் சார்ந்தது அல்லவென்றும் அது பல பாணிகளின் கலப்பு என்றும் நிபுணர்கள் ஆதாரங்களோடு நிரூபித்தனர். கடைசியில், சிலை 1980களில், ரோம் நகரிலுள்ள போலிச் சிலைகளை வடிப்பதில் கைதேர்ந்த சிற்பி ஒருவரால் வடிக்கப்பட்டது என்பது உறுதியானது. நொந்துபோன கெட்டி அரும்பொருளகம், பளிங்குச் சிலைக்கு முன்னால் வைக்கும் அறிவிப்புப் பலகையில், “இது கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது அல்லது நவீனகாலப் போலிச் சிலை” என்று திருத்தம் செய்து நிம்மதியடைந்தது. நாளடைவில், போலிக்கு ஏன் இவ்வளவு பவிஷு என்று கேட்டுப் பலரும் கொடி பிடித்ததால், அரும்பொருளகக் காட்சியகத்திலிருந்து, சிலை மீட்டுக்கொள்ளப்பட்டது. இப்போது அங்கே, அந்தச் சர்ச்சைக்குரிய கௌரோஸ் இளைஞன் சிலை இல்லை.
இத்தனை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு இரண்டே விநாடிகளில் எப்படி இது போலிச் சிலை என்று தெரியவந்தது? அதுதான் இங்கே முக்கியம். அது அப்படித்தான் என்கிறார் கிளாட்வெல். 14 மாதங்கள், பல்வேறு அறிவியல் நிபுணர்கள் பலதரப்பட்ட அறிவியல் சோதனைகள் நடத்தியும் கண்டுபிடிக்க முடியாததை முதல் பார்வையிலேயே இந்த நிபுணர்கள் கண்டுபிடித்தது எப்படி? உள்ளுணர்வு, அனுபவம், நிபுணத்துவம் எல்லாம் கலந்த ஒரு திறமை என்று சொல்லலாமா? 2 விநாடி மேதமை!..
அதுதான், நமது நாயகன் கார்ட்டருக்கும் இருந்திருக்க வேண்டும். இப்போதும் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, ரகசியமாகச் சிலர் வந்து உண்மையான உஷப்தி (Ushabti) பொம்மைகள் உள்ளன வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்பதுண்டு. முக்காலே மூணுவீசம், அவை போலியான பொம்மைகளாகத்தான் இருக்கும். உஷப்தி பொம்மைகள் என்பவை, மன்னர்களோடு சேர்த்து அடக்கம் செய்யப்படும் சிறிய பொம்மைகள். பொதுவாக வேலையாள்களின் உருவங்கள். மறுமையில், மன்னருக்கான பணிவிடைகளைச் செய்வதற்காகக் கல்லறைக்குள் அவை வைக்கப்படுவது, எகிப்தில் வழக்கம். வெவ்வேறு அளவிலான அத்தகைய பல்லாயிரம் பொம்மைகள், எகிப்தில் கிடைத்துள்ளன.
டுடன்காமுன் உஷப்தி பொம்மை |
எடுத்தெறிந்து பேசும் இயல்புகொண்ட கார்ட்டர், 1907ஆம் ஆண்டுவரை இப்படிப்பட்ட சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டு, எகிப்தில் வயிற்றைக் கழுவிவந்திருக்கிறார். அந்த ஆண்டுதான் அவர், லண்டனைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரான பிரபு கார்னர்வானைச் (Lord Carnarvon) சந்திக்கிறார். 1866ஆம் ஆண்டில் பிறந்த கார்னர்வான், பிரிட்டனில் உள்ள மாபெரும் கோட்டையில் வசித்துவந்த சீமான், கோமான், கோடீஸ்வரர் இன்னபிறர்…
கார்ட்டரும் கார்னர்வானும். படம் - கார்ட்டர் நினைவு இல்லக் கண்காட்சி |
ஃபிரான்ஸிலும் அவருக்குச் சொத்துகள் உண்டு. இங்கிலாந்தில் கார்கள் அறிமுகம் ஆகுமுன், ஃபிரான்ஸில் அவை ஓடத் தொடங்கிவிட்டன. மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில், பிரபு கார்னர்வான் ஒரு முன்னோடி. இங்கிலாந்தில், இவர்தான் மோட்டார் வாகனத்துக்குப் பதிவுசெய்துகொண்ட மூன்றாம் நபர். இயந்திரங்களால் இயக்கப்படும் வாகனங்களைக் கண்டு, பொதுமக்கள் அஞ்சிய காலம் அது. குதிரைகளால் அல்லாமல் இயந்திரங்களால் இழுக்கப்படும் பெட்டி சாலையில் ஓட வேண்டுமானால், அதன் ஆபத்தைக் குறிக்க, முதலில் சிவப்புக்கொடி ஏந்திய ஓர் ஆடவர் முன்னால் போகவேண்டுமாம். இந்தத் தகவல்களை வைத்து, அவர் ஐவேஜு என்னவென்று நாம் ஊகித்துக்கொள்ளலாம்.
Highclere Castle என்பது பிரபு கார்னர்வான் வசித்துவந்த கோட்டையின் பெயர். இன்றளவும் அவரது வாரிசுகள், அந்தக் கோட்டையில்தான் வசித்துவருகின்றனர். Downton Abbey என்னும் பிரபலமான பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடரிலும் திரைப்படத்திலும் வந்த கோட்டை அது.
விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர், கார்னர்வான் பிரபு. கலைப் பொருள் சேகரிப்பிலும் ஆர்வமுள்ள கலாரசிகர். 1903ஆம் ஆண்டிலேயே எகிப்துக்கு வந்துவிட்டார். எதனால் அவர் எகிப்துக்கு வந்தார் என்பது, விநோதமானது. ஜெர்மனியில் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய அவரை, உடல் நலம் தேறுவதற்காகக் காற்றில் ஈரப்பதம் இல்லாத, வறண்ட எகிப்துக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு, மருத்துவர் ஆலோசனை கூறியிருக்கிறார். அதைக் கேட்டு எகிப்துக்குவந்த கார்னர்வானைத் தொல்லியல் ஆர்வம் தொற்றிக்கொண்டுவிட்டது.
தன்னிடமுள்ள பணத்தைக்கொண்டு, தொல்லியல் தேடல்களைத் தொடங்கினார் கார்னர்வான். அப்போதுதான், அவருக்கு கார்ட்டர் அறிமுகமாகிறார். சொந்தமாக கார்னர்வான் நடத்திய தேடலில், பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. மம்மியாக்கம் செய்யப்பட்ட பூனை ஒன்றுதான், அவர் தனியாகத் தேடிக் கண்டுபிடித்தனவற்றுள் சொல்லிக்கொள்ளும்படியான கண்டுபிடிப்பு. ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, நமக்கு விவரம் தெரிந்த ஓர் ஆய்வாளரின் உதவியும் தேவை என்பதை உணர்ந்த கார்னர்வான், பொது நண்பர்கள் மூலமாக கார்ட்டரை அறிமுகம் செய்துகொள்கிறார்.
எகிப்தியவியல் பற்றிய ஞானம் ஏராளமாக இருந்தாலும், பூவாவுக்குப் பெரிதாக ஏதும் வழியில்லாமல் அவதிப்பட்ட கார்ட்டருக்கு இது வலியவந்த சீதேவி. விடுவாரா? கார்ட்டர் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்குப் பொருளுதவி செய்யும் நிதி ஆதரவாளராக விளங்கச் சம்மதித்தார் கார்னர்வான் பிரபு. பிறந்தது சாதனைக் கூட்டணி.
தொடக்கத்தில், இருவருமே மன்னர்களின் பள்ளத்தாக்கில்தான் தோண்டல் பணிகளை மேற்கொள்ள விரும்பினர். ஆனால் அதற்கான உரிமம், நாம் முதலில் பார்த்த அமெரிக்கரான டேவிஸ் வசம் இருந்தது. தீப்ஸ் (Thebes) அதாவது இன்றைய லக்ஸோர் நகரில் தோண்டும் உரிமையை கார்னர்வான் பெற்றிருந்தார். நைல் நதிக்கரைக்குக் கிழக்கே உள்ளது லக்ஸோர். மேற்குக் கரையில் உள்ளது மன்னர்களின் பள்ளத்தாக்கு. லக்ஸோரில் இருந்து அதிகத் தொலைவு இல்லை. பக்கம்தான். 1907 முதல் 1912வரை தீப்ஸுக்கு அருகே, ஆய்வுகளில் ஈடுபட்டனர் கார்னர்வான் பிரபுவும் கார்ட்டரும். பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை.
1914வாக்கில்தான், மன்னர்களின் பள்ளத்தாக்கில் தோண்டும் பணியைக் கைவிட முடிவெடுத்தார் அமெரிக்கரான டேவிஸ். டுடன்காமுன் கல்லறை நுழைவாயிலுக்கு 6 அடி அருகில்வரை வந்து, நூலிழையில் அதைத் தவறவிட்டவர் டேவிஸ். இந்தத் தகவலைப் பதிவு செய்திருப்பது, டேவிஸ் நியமித்த அகழாய்வு நிபுணரான ஹேரி பர்ட்டன் (Harry Burton). அவர்தான் அப்போது, டேவிஸின் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தவர். “கடைசிக்கட்ட அகழ்வுப் பணிகளை முன்கூட்டியே முடிக்காமல், இன்னும் கொஞ்சம் நீட்டித்திருந்தால், டுடன்காமுன் கல்லறையை நாங்கள்தான் கண்டுபிடித்திருப்போம்” என்கிறார் பர்ட்டன். சரி என்ன செய்யமுடியும்? வரலாற்றில் கார்னர்வான், கார்ட்டர் பெயர்கள்தான் பதிவாக வேண்டுமென இருந்திருக்கிறது.
இந்த பர்ட்டன்தான், பின்னாளில் டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்புகளைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் 1,400 புகைப்படங்கள் எடுத்த புகைப்பட நிபுணர். இவரே ஒரு தொல்லியல் நிபுணர்தான். 1922இல் அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலுள்ள மெட்ரோபாலிட்டன் அரும்பொருளகத்துக்காகப் பணிபுரிந்துகொண்டிருந்த பர்ட்டனை, மனமுவந்து கார்ட்டருக்குக் கடனாகக் கொடுத்தது அந்த அரும்பொருளகம்.
டுடன்காமுன் கல்லறை அகழாய்வின் ஒரு காட்சி. படம் - கார்ட்டர் நினைவு இல்லக் கண்காட்சி |
மன்னர்களின் பள்ளத்தாக்கில் தோண்டும் உரிமத்தை டேவிஸ் கைவிட்டதும், உடனே அதற்கு விண்ணப்பித்து அதைக் கைப்பற்றினார் கார்னர்வான் பிரபு. ஏழு ஆண்டுக் காத்திருப்புக்குப் பிறகு, 1914இல் இருவர் கூட்டணிக்குக் கிடைத்தது உரிமம். வேறு எந்த இலக்கும் இல்லாமல், டுடன்காமுன் கல்லறை ஒன்றை மட்டுமே குறியாக வைத்துப் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டனர் இருவரும். எகிப்தியவியல் குறித்த தகவல்களைக் கரைத்துக் குடித்திருந்த கார்ட்டருக்கு, டுடன்காமுனின் கல்லறை இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் எஞ்சியிருக்கிறது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. டேவிஸ் வேறு, லட்டு மாதிரி ஏராளமான தடயங்களைச் சேகரித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
அந்த நம்பிக்கை வலுப்பட, கார்ட்டரிடமும் சில ஆதாரங்கள் இருந்தன. அவை கிடைத்த இடம், டுடன்காமுனின் உறவினர்கள் என கார்ட்டர் நம்பியவர்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்தது. ஆகவே, பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியில்தான் எங்கேயோ டுடன்காமுன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார் என்று உறுதியாக நம்பினார் கார்ட்டர். ஆனால், நினைத்த உடனே வேலையைத் தொடங்க முடியவில்லை இருவராலும். முதல் உலகப்போர் வடிவில் வந்தது, முட்டுக்கட்டை. 1914 முதல் 1918 வரை நீடித்த முதலாம் உலகப் போர், உலகை நிலைகுலையச் செய்தது.
பிரிட்டனுக்குச் சென்ற கார்னர்வான் பிரபு, எகிப்துக்கு வர முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டார். பயணத்தின்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்தால், அவர் எகிப்துக்கு வரவில்லை. கார்ட்டர், எகிப்தைவிட்டு வெளியேறவில்லை. சரளமாக அரபுமொழி பேசத் தெரிந்த கார்ட்டர், பிரிட்டிஷ் வேவுத் துறைக்காக கைரோவில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்து, நான்கு ஆண்டுகளைத் தள்ளினார். கைவசம் இருந்த ஓவியத் திறமையும், கார்ட்டரின் வயிற்றை வாடாமல் பார்த்துக்கொண்டது.
திறமையான தொல்லியல் நிபுணர் என்பதைத் தாண்டி, கார்ட்டர் மிகச் சிறந்த ஓவியரும்கூட. அவர் பிறந்தது ஓர் ஓவியக் குடும்பத்தில். கார்ட்டரின் தந்தை, ஓவியர் மட்டுமின்றி சஞ்சிகைகளுக்கும் விளம்பரங்களுக்கும் படம் வரைந்து கொடுக்கும் வெற்றிகரமான கலைஞர். கல்லறைத் தோற்றத்தை நகல் எடுத்துக் கொடுக்கும் பணியில்தான், எகிப்துக்கு வந்த புதிதில் ஈடுபட்டிருந்தார் கார்ட்டர். கடைசிவரை அந்த ஓவியத் திறன், அவருக்குப் பெரிதும் கைகொடுத்தது.
டுடன்காமுன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டபோது... படம் - எகிப்தியத் தொல்லியல் துறை |
டுடன்காமுன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டபோது, பொறுமையாக அதை வரைந்து ஆவணப்படுத்தினார் கார்ட்டர். மன்னர்களின் பள்ளத்தாக்கில், கார்ட்டர் வசிப்பதற்காக கார்னர்வான் பிரபு கட்டுக்கொடுத்த வீடு இன்றும் காட்சிக்கு உள்ளது. அங்கே கார்ட்டர் வசித்த அறையில், அவர் வரைந்த ஓவியங்களின் பிரதிகள் சில வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தால் தெரியும், கார்ட்டரின் ஓவியத் திறமை. கல்லறையை அதில் இருந்த பொருள்களோடு, உண்மையான அளவைச் சுருக்கி (Scale drawing) வரைந்து ஆவணப்படுத்தினார். இல்லாவிட்டால், அந்த விவரங்களை நாம் நிரந்தரமாக இழந்திருப்போம். உண்மையில், கார்ட்டரைப் போன்ற திருத்தம் நாடும் தொல்லியல் ஆய்வாளரிடம் டுடன்காமுன் கல்லறை தட்டுப்பட்டது, நம்மைப் போன்ற வரலாற்றுப் பிரியர்களின் பேறு.
கார்ட்டர் வரைந்த படம். கார்ட்டர் நினைவு இல்லக் கண்காட்சி |
அவரளவுக்கு மற்ற எவரும், டுடன்காமுன் கல்லறை விவரங்களைப் பொறுமையாக ஆவணப்படுத்தி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். கல்லறையில் இருந்த பொருள்களை வரைந்தும் புகைப்படம் எடுத்தும், பத்திரமாக அகற்றியும், தூய்மை செய்தும் அவர் சேகரித்த விதம், எளிதான ஒன்றல்ல. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அரும்பொருள்களையும் தொல்லியல் முறைப்படி பதிவு செய்து, பத்திரமாக அகற்றி அரும்பொருளகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்க, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாயின... எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்திருக்கவேண்டும் கார்ட்டருக்கு?
டுடன்காமுன் கல்லறை. படம் - எகிப்து தேசிய அரும்பொருளகம் |
கட்டுரை மற்றும் புகைப்படங்கள்: பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம். கைரோ பழைய அரும்பொருளகத்தின் முன் |
ஆசிரியர் குறிப்பு
இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்