அறிவியலின் முக்கியமான இலக்குகளில் ஒன்று நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை விளக்குவது. சில நேரங்களில் அறிவியல் விளக்கங்களை நடைமுறை பயன்பாட்டிற்காக கேட்கிறோம். உதாரணமாக, ஒசோன் படலம் மிக வேகமாக சுருங்குகிறது, அதைத் தடுக்க எதாவது செய்யவேண்டும். எனவே அது எதனால் சுருங்குகிறது என்பதற்கு விளக்கத்தைக் கேட்கிறோம். மற்ற சமயங்களில் நாம் இப்பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவதில் உள்ள ஆர்வத்தினால் கேட்கிறோம். இந்த இருவித கேள்விகள்தான் அறிவியல் விளக்கங்களுக்கான தேடலை காலங்காலமாகத் தூண்டுகின்றன.
Carl Hempel |
அறிவியல் விளக்கம் என்பது என்ன? ஒரு நிகழ்வை அறிவியலால் விளக்க முடியும் என்றால் அதற்கு என்ன பொருள்? அரிஸ்டாடில் துவங்கி இக்கேள்விகான பதில்கள் இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் நாம் துவங்கவிருப்பது அறிவியல் விளக்கத்தைப் பற்றிய மிகவும் புகழ்பெற்ற ஒரு விதியில் இருந்து. அதை 1950-ல் ஜெர்மன்-அமெரிக்க தத்துவவாதி கார்ல் ஹெம்பெல் (Carl Hempel) முன்வைத்தார். அவ்விதி ’விளக்கத்தின் உள்ளடக்க விதி’ (Covering law model of explanation) என அழைக்கப்படுகிறது. இது ஏன் இப்படி அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.
ஹெம்பெளுடைய ‘விளக்கத்தின் உள்ளடக்க விதி’
உள்ளடக்க விதிக்குப் பின்னாலுள்ள அடிப்படைக் கருத்து மிகவும் எளிமையானது. விளக்கத்தை கோரும் ’ஏன்’ என்ற கேள்விகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பதிலே அறிவியல் விளக்கங்கள் என்று ஹெம்பெல் குறிப்பிடுகிறார். உதாரணமாக, ’ஏன் உலகம் சரியான கோள வடிவில் இல்லை?’, ‘ஏன் பெண்கள் ஆண்களை விட அதிக நாள் வாழ்கின்றனர்?’ போன்ற கேள்விகள். இக்கேள்விகள் விளக்கங்களைக் கேட்கின்றன. அறிவியல்ரீதியான விளக்கம் என்பது விளக்கத்தைக் கோரும் ’ஏன்’ என்ற ஒரு கேள்விக்கு அளிக்கப்படும் திருப்திகரமான பதில். இத்தகைய பதில்களில் இருக்கவேண்டிய அத்தியாவசியமான அம்சங்கள் என்னென்ன என்பதை அறிந்தால் அறிவியல்ரீதியான விளக்கம் என்றால் என்ன என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
அறிவியல் விளக்கங்கள் விவாத முறைமையின் தர்க்கக் கட்டமைப்பைக் கொண்டவை என்கிறார் ஹெம்பெல். அதாவது விளக்கங்கள் சில கருத்துப்புலன்களின் தொகுப்பையும், அதைத் தொடர்ந்து ஒரு முடிவையும் கொண்டவை. விளக்கம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு (phenomenon) எவ்வாறு நிகழ்ந்தது என்பதை முடிவும், அந்த முடிவு ஏன் சரியானது என்பதை கருத்துபுலன்களும் கூறும். உதாரணமாக, ஒருவர் ’ஏன் நீரில் சர்க்கரை கரைகிறது?’ என்று கேட்கிறார். இது விளக்கத்தைக் கோரும் ’ஏன்’ என்ற கேள்வி. இதற்கு பதிலளிக்க ஒரு விவாதத்தைக் கட்டமைக்க வேண்டும் என்கிறார் ஹெம்பெல். அந்த வாதத்தின் முடிவு ’நீரில் சர்க்கரை கரைகிறது’ என இருக்க வேண்டும், அதன் கருத்துப்புலன்கள் முடிவு எதனால் சரியானது என்பதை சொல்ல வேண்டும். எனவே அறிவியல்ரீதியான விளக்கத்தைக் கொடுக்கும் செயல் கருத்துபுலன்களின் தொகுப்பிற்கும் முடிவிற்கும் இடையேயான தொடர்பை துல்லியமாக வரையறுக்கும் பணியாக மாறிவிடுகிறது. கருத்துப்புலன்கள் முடிவுக்கான விளக்கமாக பார்க்கப்படுகின்றன. இதன்படி எவ்வாறு விளக்கம் தருவது என்பதுதான் ஹெம்பேல் தன்னைத் தானே கேட்டுக்கொண்ட கேள்வி.
இக்கேள்விகளுக்கு ஹெம்பெல் மூன்று படிகளில் விடையளிக்கிறார். முதலாவது - கருத்துபுலங்கள் முடிவைக் கொண்டுவர வேண்டும். அதாவது, விவாதம் பகுத்தல் முறையில் இருக்க வேண்டும். இரண்டாவது - கருத்துபுலங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். மூன்றாவது - கருத்துபுலங்கள் குறைந்தது ஒரு பொதுவிதியை அவசியம் கொண்டிருக்க வேண்டும். பொதுவிதி என்றால் என்ன என்பதற்கான சில உதாரணங்கள்: ’அனைத்து உலோகங்களும் மின்சாரத்தைக் கடத்தும்’, ’ஒரு பொருளின் முடுக்கம் அதன் நிறைக்கு எதிர்த்தகவில் மாற்றமடையும்’, ‘அனைத்து தாவரங்களும் க்ளோரொபிலைக் (Chlorophyll) கொண்டிருக்கும்’ போன்றவை. சிலசமயம் பொதுவிதிகளை ’இயற்கை விதிகள்’ என்றும் கூறலாம். இவை தனித்த உண்மைகளுக்கு (Particular Facts) நேரெதிரில் இருப்பவை. தனியுண்மைகளுக்கு சில உதாரணங்கள்: ’இந்த உலோகம் மின்னோட்டத்தைக் கடத்துகிறது’, ’என்னுடைய மேஜை மீதுள்ள தாவரம் க்ளோரொபிலைக் கொண்டுள்ளது’ போன்றவை. இவை ஒரு குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட ஒரு பொருள், விஷயம் அல்லது நிகழ்வு சார்ந்த உண்மையைக் குறிப்பவை. ஒரு அறிவியல் விளக்கத்தில் ’தனியுண்மை’ மற்றும் ’பொதுவிதி’ ஆகிய இரண்டையும் அனுமதிக்கலாம் என சொல்லும் ஹெம்பெல் குறைந்தது ஒரு பொதுவிதி அவசியமாக இருக்க வேண்டும் என்கிறார். எனவே இவரின் கருத்துப்படி ஒரு நிகழ்வை விளக்குதல் என்பது அது நிகழ்ந்த விதத்தை ஒரு பொதுவிதியில் இருந்து பகுத்துக் காண்பிப்பது. இதற்கு ஒன்று அல்லது சில விதிகள் மற்றும்/அல்லது சில தனியுண்மைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அவை அனைத்தும் நிச்சயமாக சரியானவையாக இருக்க வேண்டும்.
இதை விரிவாக பார்க்க ’ஏன் என்னுடைய மேஜையில் வைத்திருந்த தாவரம் வாடிவிட்டது?’ என்பதை நான் விளக்க முயற்சிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்: ”தாவரத்தை நான் சூரிய ஒளி விழும் இடத்தில் வைக்கவில்லை. எனவே தாவரத்திற்கு மிகக் குறைவான வெளிச்சமே சென்றுள்ளது. சூரிய வெளிச்சம் தாவரங்களுக்கு ஒளிச்சேர்க்கை செய்ய மிகவும் அவசியமானது. தாவரங்களால் ஒளிச்சேர்க்கை இல்லாமல் அவை உயிர் வாழ அவசியமான கார்போஹைட்ரேடை உருவாக்க முடியாது. இது இல்லை என்றால் தாவரங்கள் இறந்துவிடும். எனவே எனது தாவரம் இறந்துவிட்டது”. இந்த விளக்கம் ஹெம்பெலின் விதிக்கு மிகச்சரியாக பொருந்துகிறது. இது தாவரத்தின் இறப்பை இரண்டு பொதுவிதிகள் (தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய வெளிச்சம் தேவை, தாவரங்கள் உயிர் வாழ ஒளிச்சேர்க்கை அவசியம்), ஒரு தனியுண்மை (அறையிலிருந்த தாவரம் சூரிய வெளிச்சத்தைப் பெறவில்லை) ஆகியவற்றைக் கொண்டு பகுத்தல் வழியாக விளக்குகிறது. இந்த இரு விதிகளும் தனியுண்மையும் சரியானவை என்பதால் தாவரத்தின் இறப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் தான் கருத்துப்புலங்கள் முடிவுக்கான நல்ல விளக்கம் என்கிறார் ஹெம்பெல்.
ஹெம்பெலுடைய விதியை இவ்வாறு வரையறுக்கலாம்:
பொதுவிதிகள் (General laws)தனியுண்மைகள் (Particular facts)-------------------------விளக்கப்பட வேண்டிய நிகழ்வு (Phenomenon to be explained)
விளக்கப்பட வேண்டிய நிகழ்வு எக்ஸ்ப்ளனேன்டம் (explanandum) என்றும் விளக்கம் தருகின்ற பொதுவிதிகள் மற்றும் தனியுண்மைகள் எக்ஸ்ப்ளனன்ஸ் (explanans) என்றும் அழைக்கப்படுகின்றன. எக்ஸ்ப்ளனேன்டம் ’பொது’வான விஷயமாகவும் இருக்கலாம் அல்லது ’குறிப்பிட்ட’ ஒரு விஷயமாகவும் இருக்கலாம். முந்தைய உதாரணத்தில் எக்ஸ்ப்ளனேன்டம் ஒரு குறிப்பிட்ட விஷயம் - ’என்னுடைய தாவரத்தின் இறப்பு’. ஆனால் சிலசமயம் விளக்கப்பட வேண்டியவை (எக்ஸ்ப்ளனேன்டம்) பொதுவான ஒன்றாகவும் இருக்கும். உதாரணமாக, ’ஏன் சூரிய ஒளி தோலில்படுவது தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது’. இது பொதுப்படையானது. இதற்கான விளக்கத்தை அடிப்படை விதிகள் (அதாவது தோல் செல்களின் மீது கதிரியக்கத்தின் தாக்கம் பற்றிய விதிகள்), தனியுண்மை (சூரிய ஒளியில் உள்ள கதிரியக்கத்தின் அளவு) ஆகியவற்றில் இருந்து பெற வேண்டும். எனவே எக்ஸ்ப்ளனேன்டம் பொதுவான ஒன்றாக இருந்தாலும், குறிப்பிட்ட ஒன்றாக இருந்தாலும் அதற்கான அறிவியல் விளக்கத்தின் கட்டமைப்பு ஒன்றே.
ஹெம்பெலின் விதி எதனால் உள்ளடக்க விதி என அழைக்கபடுகிறது என்று பார்ப்பது எளிது. ’விளக்கப்பட வேண்டிய நிகழ்வு இயற்கையின் சில பொதுவிதிகளில் உள்ளடங்கி உள்ளது’ எனக் காண்பிப்பதே விளக்கத்தின் அடிப்படை. இதன்படி ஒரு நிகழ்வு பொதுவிதி ஒன்றின் விளைவு எனக் காட்டப்படுகிறது. இப்படி காட்டுவதால் அந்நிகழ்வில் உள்ள மர்மத்தன்மை நீக்கப்படுகிறது. பல அறிவியல் விளக்கங்கள் ஹெம்பெல் வரையறுத்த இந்த வடிவத்திற்குள் நன்கு பொருந்துகின்றன. உதாரணமாக, ’ஏன் கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன?’ என்பதற்கான விளக்கத்தை நியூட்டன் தனது ஈர்ப்பு விதியிலிருந்தும், கூடுதலான சில சிறிய ஊகங்களில் இருந்தும் பகுத்துக் காண்பிக்கிறார். நியூட்டனின் விளக்கம் ஹெம்பெலின் விதிக்கு நன்கு பொருந்துகிறது. எப்படியென்றால் பொதுவிதிகள் மற்றும் சில தனியுண்மைகள் ஆகியவற்றினால் ஒரு நிகழ்வு இவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டும் எனக் காட்டி விளக்கம் தருகிறார். இதற்குப் பிறகு ஏன் கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றுகின்றன என்பதில் எந்த மர்மமும் இருக்கவில்லை.
எல்லா அறிவியல் விளக்கங்களும் இந்த விதிக்குப் பொருந்தாது என்பதிலும் ஹெம்பெல் கவனமாகவே இருந்தார். உதாரணமாக, நீங்கள் ஒருவரிடம் ’ஏன் சமீப காலமாக ஏதென்ஸ் நகரில் புகைப்படலம் அதிகமாக உள்ளது’ என கேட்கிரீகள். அவர் ’மரங்களை எரிப்பது அதிகமானதே காரணம்’ என மறுமொழி சொல்கிறார். இந்த விளக்கம் சரியானதே. எந்த ஒரு விதியும் இதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட இது ஏற்றுகொள்ளக்கூடிய மிகச் சரியான அறிவியல்ரீதியான விளக்கம். எனுனிம் விளக்கத்தை முழு விவரமாகச் சொல்லும் போது அதில் விதிகள் இடம்பெறும் என ஹெம்பெல் சொல்லக்கூடும். இங்கு மறைமுகமாக ஒரு விதி உள்ளது, அது இவ்வாறு சொல்கிறது: ’ஒரு இடத்தில் தாக்குபிடிக்கும் அளவைவிட மரப்புகை அதிகமாக வெளியேறுகிறது, மேலும் அங்கு காற்று வீசும் வேகம் குறைவாக உள்ளது, எனவே அங்கு புகைப்படலம் உருவாகியது’. இந்த விதி ’ஏன் ஏதென்சில் புகைப்படலம் மிக மோசமாக உள்ளது’ என்பதற்குக் கொடுக்கப்படும் முழுமையான விளக்கத்தில் மேற்கோள்காட்டப்பட வேண்டும். கூடவே ஏதென்சில் மரம் எரிப்பது அதிகமாகிவிட்டது, அங்கு காற்று வீசும் வேகம் மிகக் குறைவு போன்ற தனியுண்மைகளும் சுட்டப்பட வேண்டும். ஆனால் நாம் நடைமுறையில் அனைத்து விளக்கங்களையும் இவ்வளவு விவரமாக சொல்லமாட்டோம் - நாம் மேதாவித்தனமாக இல்லாதவரையில். எனினும் விளக்கத்தை நாம் மிக விவரமாகச் சொல்லும் போது அது உள்ளடக்க விதியின் அமைப்புக்கு நன்கு பொருந்தக் கூடியதாகவே இருக்கும்.
ஹெம்பேல் தனது உள்ளடக்க விதியில் இருந்து மேலும் ஒரு சுவாரஸ்யமான முடிவைத் தருகிறார். அது கணிப்பிற்கும் விளக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியது. ‘கணிப்பும் விளக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’ என்கிறார் ஹெம்பெல். அதாவது ஒரு நிகழ்விற்கு உள்ளடக்க விதியின் படி விளக்கத்தைத் தரும்போதெல்லாம் நாம் மேற்கோள்காட்டும் விதிகளும் தனியுண்மைகளும் அந்நிகழ்விற்கான காரணத்தைக் கணிக்க உதவிசெய்கிறன, அக்காரணத்தைப் பற்றி நமக்கு முன்னபே தெரிந்திருக்காத பட்சத்தில். இதை விரிவாகப் பார்க்க மீண்டும் ’ஏன் கோள்கள் நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன’ என்பதற்கு நியூட்டன் கொடுத்த விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன என்ற மாறாவுண்மையானது நியூட்டன் தனது கோட்பாட்டைக் கொண்டு விளக்குவதற்குப் பல ஆண்டுகள் முன்பே கெப்ளரால் கண்டறியப்பட்டது. இதை நியூட்டன் தன்னுடைய விதியைக் கொண்டு மேலும் விரிவாக விளக்குகிறார். ஆனால் இந்த உண்மை முன்னரே தெரியவராமல் இருந்திருக்கும் பட்சத்தில் இதை நியூட்டனால் தனது ஈர்ப்புக் கோட்பாட்டைக் கொண்டு கணித்திருக்க முடியும். எனவே எல்லா அறிவியல் ரீதியான விளக்கங்களும் ஒரு கணிப்பிற்கான சாத்தியத்தைக் கொண்டவையே, கேள்விக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வைப் பற்றி முன்பே தெரிந்திருக்கவில்லை என்றால் அந்நிகழ்விற்கான காரணத்தைக் கணிக்க உதவிசெய்யும் என்கிறார் ஹெம்பெல். இதை தலைகீழாகத் திருப்பினாலும் சரியாக வரும் என ஹெம்பெல் கருதினார். அதாவது நம்பகமான அனைத்து கணிப்புகளும் ஒரு விளக்கத்திற்கான சாத்தியங்களைக் கொண்டதே. உதாரணமாக, மலை-கொரில்லா குரங்குகள் 2030-ல் முற்றாக அழிந்துவிடும் என அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஒருவேளை அவர்கள் சொன்னது சரியாகிவிட்டால், ஹெம்பெல் கூறியதன் படி கொரில்லாக்கள் அழிவதற்கு முன்பே அந்நிகழ்வைக் கணிக்க அறிவியலாளர்கள் பயன்படுத்திய தகவலானது அந்நிகழ்வு நிகழ்ந்த பின்பு விளக்குவதற்கு உதவும். ஆகவே விளக்கமும் கணிப்பும் அவற்றின் கட்டமைப்பு படி சமச்சீரானவை.
அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியுமா?
நவீன அறிவியல் நாம் வாழும் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பை விளக்ககூடியது. ஆனால் இன்னமும் பல விஷயங்கள் அறிவியலால் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ விளக்கப்படாமல் உள்ளன. ’உயிரின் தோற்றம்’ இதற்கு ஒரு உதாரணம். நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தன்னைத் தானே பிரதியெடுக்கும் திறன் கொண்ட மூலக்கூறுகள் முதன்மைக் குழம்பில் (Primordial soup) தோன்றின. அங்கிருந்து உயிர்களின் பரிணாமம் தொடங்குகிறது. ஆனால் தன்னைத்தானே பிரதியெடுக்கும் மூலக்கூறுகள் முதன் முதலில் எப்படித் தோன்றின என்பதை நம்மால் இன்னமும் புரிந்துகொள்ள இயலவில்லை. மற்றொரு உதாரணம், அஸ்பெர்கர் நோய் (Asperger’s syndrome) இருக்கும் குழந்தைகள் மிக நல்ல நினைவாற்றலைக் கொண்டிருக்கின்றன. பல ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்துள்ளன. ஆனால் இதற்கான விளக்கத்தை யாரும் வெற்றிகரமாக தரவில்லை.
இம்மாதிரியான கேள்விகளுக்கு அறிவியலால் விளக்கம் கொடுக்க முடியும் என்றே பலர் நம்புகிறார்கள். இது நம்பத்தகுந்த பார்வைதான். உயிரின் தொடக்கம் பற்றிய சிக்கலை விடுவிக்க பல மூலக்கூறு உயிரியலாளர்கள் கடுமையாக உழைத்துவருகின்றனர். எதிலும் நம்பிக்கையற்ற ஒருவர் (Pessimist) மட்டுமே இதை தீர்வுகாண முடியாத சிக்கல் என்று சொல்வார். எனினும் இது தீர்ப்பதற்கு அவ்வளவு ஒன்றும் எளிமையானது அல்ல. ஏனென்றால் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் எப்படி இருந்தது என்பதை நாம் அறிவது கடினம். இருந்தாலும் உயிரின் தோற்றத்தை விளக்கவே முடியாது எனச் சொல்வதற்கு எந்த காரணங்களும் இல்லை. இதுபோலவே அஸ்பெர்கர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அசாதரணமான நினைவாற்றலும் நல்ல உதாரணம். நினைவை ஆராயும் அறிவியல் தற்போது வளர்ந்துவரும் புதிய துறை. இதில் அஸ்பெர்கர் நோய் போன்று நரம்பியலை அடிப்படையாகக் கொண்ட பல விஷயங்கள் கண்டறியப்படுவதற்காக உள்ளன. நிச்சயமாக ஒருநாள் விளக்கம் கண்டறியப்படும் என்ற உறுதியை நம்மால் கொடுக்க முடியாது. ஆனால் இது போன்ற பல கேள்விகளுக்கு நவீன அறிவியல் வெற்றிகரமான விளக்கங்களைக் தந்துள்ளது. நல்ல முதலீடு இருந்தால் இன்றுள்ள பல விளக்கப்படாத விஷயங்களுக்கு ஒருநாள் அவையும் விளக்கப்படக்கூடும்.
கோட்பாட்டு அளவிலாவது எல்லாவற்றையும் விளக்கிவிடும் தன்மை கொண்டதா அறிவியல்? அல்லது சில நிகழ்வுகள் அறிவியலால் எப்பொழுதும் விளக்கப்படாமலேயே எஞ்சியிருக்குமா? இவை பதில் சொல்வதற்கு எளிமையான கேள்விகள் அல்ல. ஒருபக்கம், எல்லாவற்றையும் அறிவியல் விளக்கும் என ஆணித்தரமாக சொல்வது ஆணவப் பேச்சு என சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம், எந்த குறிப்பிட்ட நிகழ்வையும் அறிவியலால் ஒருபோதும் விளக்க முடியாது என சொல்வது குறுகிய பார்வையாகத் தெரிகிறது. அறிவியல் மிக வேகமான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டிருக்கும் துறை. எனவே இன்றைய அறிவியலால் விளக்கவே முடியாது என்றிருக்கும் ஒரு நிகழ்வுக்கு நாளை மிகச் சுலபமாக விளக்கம் கொடுக்கப்படலாம்.
அறிவியலால் ஒருபோதும் எல்லாவற்றையும் விளக்க முடியாது எனச் சொல்வதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் இருபதாகவே பல தத்துவவாதிகள் கருதுகின்றனர். ஒரு நிகழ்வு எதுவாக இருந்தாலும் அதை விளக்க நாம் இன்னொன்றைத் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளது. அந்த இன்னொன்றை எதன் மூலம் விளக்குவது? மீண்டும் நியூட்டனை நினைவுபடுத்துங்கள். அவர் தனது ஈர்ப்பு விதியைக் கொண்டு பலவேறுபட்ட நிகழ்வுகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஆனால் எதன் மூலம் ஈர்ப்பு விதியை விளக்குவது? ஒருவர் ஏன் அனைத்து பொருட்களும் மற்ற பொருட்களின் மீது தனது ஈர்ப்பு விசையை செலுத்துகின்றன என்று கேட்டால் அவருக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த கேள்விக்கு நியூட்டனிடமும் பதிலில்லை. நியூட்டனிய அறிவியலில் ஈர்ப்பு விதி ஒரு அடிப்படையான விதி. இது மற்றவைகளுக்கு விளக்கம் தரும், ஆனால் இது தன்னை விளக்கிக் கொள்ளாது. இந்த உதாரணத்தின் மூலம் நாம் ஒரு பொதுவான முடிவிற்கு வரலாம். எதிர்கால அறிவியல் எவ்வளவு விளக்கங்களைக் கொடுத்தாலும் அவற்றை சில அடிப்படையான விதிகளைக் கொண்டே கொடுக்க முடியும். எந்த அடிப்படை விதியும் தன்னைத்தானே விளக்கிக்கொள்ள இயலாது என்பதால், இதில் சில விதிகள் விளக்கம் அளிக்கப்படாமலேயே எஞ்சியிருக்கும்.
இந்த வாதம் ஒரு அருவ (Abstract) வாதம். ஏனென்றால் இது சிலவற்றை விளக்கவே முடியாது என காண்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் அவை என்ன என்று சொல்லவில்லை. இருந்தாலும் தத்துவவாதிகள் சிலவற்றை விளக்கவே முடியாது என்பதில் உறுதியாக உள்ளனர். உதாரணம் பிரக்ஞை (conscious). உணரும், சிந்திக்கும் திறன் கொண்ட பிரக்ஞையானது மனிதனையும் அவனைப் போன்ற உயர்நிலை விலங்குகளையும் பிற உயிர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம். மூளை அறிவியல், உளவியல் போன்ற துறைகளின் வல்லுநர்கள் பிரக்ஞையின் இயல்பு பற்றிய ஆய்வுகளை இன்றும் தொடர்ந்து செய்துவருகிறார்கள். ஆனால் இந்த ஆய்வுகள் என்ன முடிவுகளைக் கொடுத்தாலும் பிரக்ஞையின் இயல்பை முழுமையாக விளக்க முடியாது என சமகால தத்துவவாதிகள் சொல்கிறார்கள். பிரக்ஞை சில உள்ளார்ந்த மர்மங்களைக் கொண்டுள்ளது, அவற்றை எந்த அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாகவும் விடுவிக்க முடியாது என்கிறார்கள்.
இந்தப் பார்வைக்கான அடித்தளம் என்ன? அடிப்படையாகவே பிரக்ஞையில் நிகழும் அனுபவத்தை வேறெவற்றுடனும் ஒப்பிட முடியாது, இது முழுக்கமுழுக்க அகவயமான ஒன்று. உதாரணமாக, ஒரு திகில் படம் பார்க்கும் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு தனித்துவமான ‘உணர்வை’ கொண்ட அனுபவம், அது திகில் உணர்வு. அந்த ’உணர்வை’ உருவாக்குவதற்கு நம் மூளையில் மிகச் சிக்கலான செயல்கள் நடைபெறும். ஒருநாள் அவற்றை நரம்பியலாளர்கள் விவரிக்கலாம். ஆனால் திகில் படத்தைப் பார்க்கும் பொழுது ஏன் வேறு உணர்வுகள் வராமல் திகில் உணர்வு வருகிறது என்பதை இது விளக்குமா? விளக்காது என சில தத்துவவாதிகள் வாதிடுகிறார்கள். இவர்களின் பார்வைப்படி, மூளையின் மீதான அறிவியல் ஆராய்ச்சிகள் மூளையின் எந்த செயல்பாடு எந்த பிரக்ஞை அனுபவத்துடன் தொடர்புடையது என்பதை சொல்லும். இது முக்கியமான சுவாரஸ்யமான தரவே. இருந்தாலும் தனித்துவமான அகவய ’உணர்வுகளைக்’ கொண்ட அனுபவம் ஏன் முற்றிலும் உடலின் பகுதியான மூளையின் செயல்பாடுகளால் உருவாகிறது என்பதை நமக்கு சொல்லாது. எனவே பிரக்ஞை முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியோ அறிவியலால் விளக்கபட இயலாததாகவே இருக்கும்.
இந்த வாதம் மிக முக்கியமானது என்றாலும் சர்ச்சைக்குரியது. நரம்பு அறிவியலாளர்கள் முழுவதுமாகவே இவ்வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தத்துவவாதிகள் கூட எல்லோருமே இதை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்லமுடியாது. டேனியல் டென்னெட் (Daniel Dennett) என்ற தத்துவவாதி 1991-ல் புகழ்பெற்ற தனது புத்தகத்திற்கு ’பிரக்ஞை விளக்கப்பட்டது’ (Consciousness explained) என்ற தலைப்பை வைத்தார். பிரக்ஞையை அறிவியல் ரீதியாக விளக்க முடியாது என்ற கருத்தை ஆதரிப்பவர்களை குறைவான கற்பனைத் திறன் கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்படுகின்றனர். பிரக்ஞை-அனுபவத்தின் அகவய அம்சத்தை தற்போதிருக்கும் மூளை அறிவியல் விளக்காது என்பதை உண்மை என்றே எடுத்துக்கொண்டாலும், எதிர்காலத்தில் வேறுபட்ட விளக்க முறைகளைக் கொண்ட வேறொரு வகையான மூளை அறிவியல் துறை நம்முடைய அனுபவங்கள் எதனால் அவ்வாறு உணரப்படுகின்றன என்பதை விளக்க இயலும் என கற்பனை செய்ய முடியாதா? அறிவியலாளர்களிடம் ”என்ன இது, இதை விளக்கவே முடியாது” என சொல்லும் தத்துவாதிகளின் ஒரு நீண்ட மரபே உள்ளது. எனினும் அறிவியல் முன்னேற்றங்கள் தத்துவவாதிகள் கூறியதை தவறு என அடிக்கடி நிரூபித்துகொண்டே இருக்கின்றன. பிரக்ஞைக்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் கொடுக்க முடியாது என்று வாதிடுபவர்களுக்கும் இதே கதிதான் நிகழுமா என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.
=================
அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி
மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி
முந்தைய பகுதிகள்:
1.அறிவியல் என்றால் என்ன?
2.அறிவியல் தத்துவம் என்றால் என்ன?
3.அறிவியல் அனுமானங்கள்