Monday 29 July 2024

உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும் - கோவைமணி நேர்காணல்

கோவைமணி, மனைவி சாந்தி

மோ. கோ கோவைமணி அவர்கள் சுவடியியல் அறிஞர், ஆய்வாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் முப்பத்துமூன்று ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல ஓலைச்சுவடிகளை நூலாக பதிப்பித்திருக்கிறார். இவர் மேற்கொண்ட சுவடியியல் பணிகளில் முக்கியமானது பல்கலைக்கழகச் சுவடி சேகரிப்பை மின்னாக்கம் செய்தது. இதற்காக பிரிட்டிஷ் நூலக ஆவணக் காப்பக திட்டத்தின் (Endangered Archives Programme - EAP) நல்கை பெற்று இப்பணியைச் செய்திருக்கிறார். மாணவர்களுக்குத் தொடர்ந்து சுவடியியல் கற்பிப்பதும் சுவடிப்பயிற்சி அளிப்பதும் இவர் மேற்கொள்ளும் இன்னொரு முக்கியமான பணி. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இணையம் மூலமாக சுவடிப்பயிற்சி அளித்திருக்கிறார். 2024 ஆண்டிற்கான தமிழ் விக்கி - தூரன் விருதைப் பெற்றிருக்கிறார்.

இவரது சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்ப்பேட்டை. தந்தை வடவெல்லைத் தியாகி கோதண்ட முதலியார், தாயார் தெய்வானையம்மாள். மனைவி சாந்தி, இரு மகள்கள் பாரதி, தேன்மொழி. 

கோவைமணி
உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லமுடியுமா?

எனது சொந்த ஊர் திருத்தணிக்கு அருகிலுள்ள பொதட்டூர்ப்பேட்டை. மேல்நிலைப்பள்ளி வரை அதே ஊரில்தான் படித்தேன். என்னை கோபால் என்றுதான் ஊரில் அழைத்து வந்தார்கள். பள்ளியில் சேர்க்கும் போது எனது அப்பா ஆழ்வார் பாசுரங்களில் இருந்த கோவை மணி மார்பன் என்ற வரிகளில் இருந்து கோவைமணி என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துப் எனக்குப் பெயரை வைத்தார்.

அப்பா தொடக்கப்பள்ளி ஆசிரியர். வடவெல்லைத் தந்தை, தமிழறிஞர் மங்கலங்கிழாரின் மாணவ அணுக்கர். மெட்றாஸ் மாகாணத்திலிருந்து மாநிலங்கள் பிரிவினையின்போது தமிழ்நாட்டின் வடக்கு எல்லை வரையறை செய்யப்படுவதில் அப்போது சர்ச்சைகள் இருந்தன. எனது தந்தையார் திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் என்று போராடியவர்களுள் ஒருவர். இதற்காக பலமுறை சிறை சென்று, வடவெல்லைப் போராட்ட தியாகி என்றே அறியப்பட்டவர். ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு ஆன்மிக நாட்டம் அதிகரித்ததால் பல்வேறு தலங்களுக்குப் பயணித்துக் கொண்டே இருந்தார்.

இளங்கலை வேதியியல் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தேன். முதுகலை தமிழ், எம்.ஃபில் ஆகியவற்றைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், பயணக்கதை, கதைக்கவிதை, கவிக்கதை போன்ற புனைவு முயற்சிகள் செய்திருக்கிறேன். பொருளாதார சூழ்நிலையில் அவற்றை வெளியிடாமல் ஏட்டளவிலேயே இருந்ததை இப்போது என்னுடைய பிளாகர்களில் வெளியிட்டிருக்கிறேன். தமிழ்மேல் உள்ள ஆர்வத்தால்தான் அத்துறையைத் தெரிவு செய்தேன். ஆனால் அன்று பெரும்பாலானவர்கள் முதுகலை தமிழ்தான் படித்தனர். அதில் சிறப்புப்புலம் ஒன்றை தேர்ந்தெடுத்துப் படிக்கலாமே என்று யோசிக்கையில் சுவடியியல் மீது ஆர்வம் வந்தது. அப்போது தினத்தந்தி செய்தித்தாள் மூலம் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் 40 நாள் சுவடியியல் படிப்பு ஒன்றை விளம்பரப்படுத்தியிருந்தது. அந்தப் பயிற்சியில் இணைந்துகொண்டேன். அதன் தொடக்கவிழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்த 40 நாள் பயிற்சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு இந்தப் பல்கலைக்கழகத்தில் பணி வழங்குவோம் என்று அறிவிப்பு செய்தார். பயிற்சி நிறைவில் நான் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

தந்தை மற்றும் குடும்பத்துடன்

குடும்பத்தாருடன் கோவைமணி
ஆனால் உடனே அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நாற்பது நாள் பயிற்சி எனக்கு போதாது, மேலும் ஓராண்டு சுவடியியல் பட்டயப் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலவேண்டும் என்று விரும்பினேன். இதைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரியப்படுத்தினேன். அவர்களும் ஒப்புக் கொண்டனர். சென்னையில் பேராசிரியர் பூ. சுப்பிரமணியம் தான் எனக்குச் சுவடிப் பயிற்சியளித்தார். அவரது மாணவராக ஓராண்டு பயின்று அங்கும் சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மீண்டும் தஞ்சை பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு எனக்குப் பணி ஆணை கிடைத்தது. அன்றிலிருந்து (18.09.1989) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித்துறையில் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பணியாற்றி 30.06.2023இல் ஓய்வு பெற்றேன்.
 
எனது சிறுவயதில் வாரியார் சுவாமிகள் பொதட்டூர்ப்பேட்டையில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணானந்தா என்ற துறவியின் மடத்திற்கு வருடத்திற்கு ஓரிரு முறையாவது வந்துவிடுவார். அப்போது அவருக்கு உணவு, தேநீர் எல்லாம் எங்கள் வீட்டிலிருந்துதான். அம்மா தயார் செய்வதை அவருக்கு எடுத்துச் சென்று வழங்கும் பணி என்னுடையது. அவர் வரும்போதெல்லாம் அவருடனே இருப்பேன். அவருடன் ஒன்றாக உண்டு உறங்கியிருக்கிறேன். ஒருநாள் என்னை அழைத்து எனது காதில் ஒரு மந்திரம் சொன்னார். இது உனக்கு இப்பொழுது நினைவில் இருக்காது. இது மீண்டும் உன் கண்ணிற்குத் தென்படும்போது உனக்கு வேலை கிடைக்கும் என்றார். அவர் சொன்னது போலவே நடந்தது. 

மாணவராகச் சுவடியியலில் என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?

முறைப்படி கற்றேன் என்பதால், பெரிய சிக்கல்களைச் சந்திக்கவில்லை. அதற்கு எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் முக்கியமான காரணம். பூ சுப்பிரமணியம், தமிழ்க்கடல் கோபாலய்யர், பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை, பேராசிரியர் த.கோ. பரமசிவம், பேராசிரியர் வே.இரா. மாதவன் போன்ற சுவடித்துறை வல்லுநர்கள் தான் எனக்குப் பயிற்றுவித்தவர்கள். சரஸ்வதி மஹாலில் பணியாற்றி ஓய்வுபெற்ற சொக்கலிங்க சுவாமிகள் தஞ்சை பல்கலைக்கழகத்தில் எனக்கு சுவடி பயிற்றுவித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். மற்ற மாணவர்கள் பயிற்சிக் காலத்தில் மட்டும் பயின்றார்கள் என்றால் நான் மட்டும் எல்லாப் பொழுதையும் சுவடிப் பயிற்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டேன். பேராசிரியர்களைத் தொடர்ந்து சந்தித்து எழுத்துருக்கள் குறித்த சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதன் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்பவுமே இருக்கும். தொடக்க நாட்களில் இருந்தே எப்படி இந்த எழுத்து உருமாற்றம் பெற்றிருக்கும் அதன் அடிப்படை என்னவாக இருக்கும் என்று யோசித்து விளங்கிக் கொள்வது எனது பழக்கம். பிற மாணவர்கள் 10 பாடல்களைச் சுவடியில் இருந்து பெயர்த்து எழுதும் அதே நேரத்தில் நான் 100 பாடல்கள் வரை பெயர்த்தெழுதிவிடுவேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பிறர் மூன்று முறை எழுதித்தான் அதன் சரியான அமைப்பைப் பெயர்த்தெழுதி சரி செய்வர். எனக்குச் சுவடியில் உள்ளவற்றைப் படிக்கையிலேயே அதன் யாப்பு அமைப்பு புரிந்துவிடும். வாய்விட்டுப்படித்தால் சொற்கள் அதற்கான இடத்தில் அமர்ந்துவிடும். சந்தங்களைப் பிரித்து நேரடியாக விருத்தத்தில் எழுத முடியும். வாய்விட்டு முதல்முறை படிக்கும்போதே அதன் இலக்கணம் சொல்லமைவு குறித்து விளங்கிவிடும். ஒரு கட்டத்தில் பெரிய திருத்தங்களின்றி நேரடியாகவே சுவடியில் இருந்து பிரதி செய்ய ஆரம்பித்துவிட்டேன். நான் உள்ளுணர்வோடு இதைச் செய்தேன் என்பதுதான் வித்தியாசம். ஆர்வம் இருந்தால் எதையும் எளிமையாக புரிந்துக்கொள்ளலாம்.

சிரவை ஆதீனம் கௌமார மட தலைவருடன் கோவை மணி
சுவடிகள் மின்னாக்கம் செய்வதன் சவால்கள் என்ன? பிற இடங்களில் மின்னாக்கம் செய்யப்படுகிறதா?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் நூலகம் செயல்படுத்தும் ‘அருகிவரும் ஆவணங்கள் காப்பக திட்டத்தின்’ நல்கை பெற்று சுவடிகளை மின்னாக்கம் செய்யும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். ஆனால் தற்போது தமிழக அரசே சுவடிகளைக் கண்டடைந்து சுவடிகளைக் காக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. தமிழகத்தில் பல சுவடி நூலகங்கள் உள்ளன. பல தனியார் சேகரிப்புகள் உள்ளன. வீடுகளில் இருந்து இன்னும் வெளிக்கொணர வேண்டிய சுவடிகள் உள்ளன. சரஸ்வதி மகால் உள்ளிட்ட வெவ்வேறு சுவடிக் காப்பகங்கள் இன்று மின்னாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. தற்போது மின்னாக்கம் செய்யும் திட்டங்களில் ஈடுபடுபவர்களிடம் நான் அனுபவத்தால் சொல்ல வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சுவடியை எடுத்தால் அவற்றை அப்படியே மின்னாக்கம் செய்வதில் பயனேதும் இல்லை.

இரண்டு பிரிவாக அவற்றை மின்னாக்கம் செய்யவேண்டும். முதலில் சுவடியைச் சீர்செய்ய வேண்டும். அவற்றை முறையாகச் சுத்தப்படுத்தி, ஓலைகளை வரிசைப்படுத்த வேண்டும். எது பாடல் எண், எது தொடர் எண் என்ற புரிதல் வேண்டும். ஓலைகளில் எது முதலாவது எது அடுத்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக ஒரு நூல் பல காண்டங்களாக எழுதப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம், அவற்றில் 52ம் எண் பாடல் இரண்டு வெவ்வேறு காண்டங்களில் இருக்கும், எந்தப் பாடல் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்று பார்க்க வேண்டும். சில இடங்களில் ஓலைகள் சிதைந்து இருந்தால் நான் சொல்லிணைவுகளை அடிப்படையாக வைத்தும் வரிசைப்படுத்தியிருக்கிறேன். இவற்றையெல்லாம் செய்யத் தமிழறிவும், சுவடியியல் அனுபவமும் தேவை. இதே பிரச்சனை கல்வெட்டுகளிலும் உண்டு. கோவில்களில் உள்ள கற்கள் இடம்பெயர்ந்துவிடும். ஒன்றிரண்டு விடுபட்டும் போகிறது. அங்கும் இதேபோன்ற சிக்கல்கள் ஏற்படும்.

அடுத்ததாக மின்னாக்கம் செய்வதற்கான நிலைப்படுத்தப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் நூலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றினேன். ஆவணக் காப்புத் திட்டத்தில் நிலைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் உள்ளன. எந்த ஒளிப்படக்கருவியைப் பயன்படுத்த வேண்டும், எந்த மோடில் எடுக்க வேண்டும், எவ்வளவு dpi இருக்க வேண்டும், எவ்வளவு பிக்ஸலில் எடுக்க வேண்டும், எந்த அளவில் எடுத்துச் சேமிக்கவேண்டும், படத்தின் நீள அகலம் என்னவாக இருக்கவேண்டும் என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் முதலில் ஒரு சுவடியை RAWவில் படம் எடுத்துப் பின்னர் அதை TIFFலும் அதிலிருந்து PDFலும் மாற்றிச் சேமிப்போம். இம்முறையைப் பின்பற்றுவதால் படத்தை பெரிதாக்குகையில் அது உடைவதில்லை. தெளிவாக இருக்கும். jpeg format-ல் மின்னாக்கம் செய்து சேமித்தால் அவற்றைப் பெரிதாக்குகையில் அது தெளிவாக இருப்பதில்லை. தவறாக இதை மின்னாக்கம் செய்வதால் யாருக்கும் பயனில்லை.

நான் அறிந்தவரை தற்போதைய மின்னாக்க முயற்சிகள் சரிவர செய்யப்படவில்லை. ஓலைச்சுவடிகளை பொறுத்தவரை சமயங்களில் ஒரே சுவடிக் கட்டில் பல்வேறு நூல்கள் கூட இருக்கும். இரண்டாவது ஓலையும் பத்தாவது ஓலையும் சேர்ந்து ஒரே நூலென தோற்ற மயக்கமளிக்கும். ஒளிப்படம் எடுப்பவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. முதலில் மின்னாக்கம் செய்துகொள்வோம் பின்னர் அதைச் சரிசெய்வோம் என்று எண்ணுவது பெரும் தவறு. சுவடி படிக்கத் தெரிந்தவரும், கணிப்பொறியில் ஒளிப்படமாக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப அறிவுடையவருமாகவும் என இருசாராரும் சேர்ந்து செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி இது. கிடைத்தவரை படம்பிடித்து வைத்துக்கொள்கிறேன் என்று நினைப்பது பெரும் பிழையாக மாறக்கூடும்.

இதில் உள்ள மற்றோர் அபாயம் நாம்தான் இதை மின்னாக்கம் செய்துவிட்டோமே என்ற உணர்வு. இது சுவடிகளின் எஞ்சிய வாழ்நாள் மீது கேள்விக்குறியாக விழுந்து விடக்கூடும். சுவடிகள் பாதுகாக்கப்படாமல் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. சுவடிகளை மின்னாக்கம் செய்துவிட்டாலும் அதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இதை எதிர்கொள்ள சரியான திட்டமிடலும் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றுதலும் அவசியமாகிறது. நாங்கள் ஓரிடத்தில் மின்னாக்கம் செய்வதற்கான யூனிட்டை நிறுவியிருக்கிறோம். சிலருக்கு இது இயலாது போகலாம். இந்தக் குறைகளைத் தவிர்க்க நாம் நகரக் கூடிய சிறிய யூனிட்டுகளைத் தயாரிக்க முயற்சிக்கலாம். இதனால் தேவைப்படும் இடத்திற்கு இதைக்கொண்டு சென்று மின்னாக்கம் செய்யலாம்.

இளங்குமரனார், ம,வே,பசுபதி, ச.வே,சுப்பிரமணியனார் மற்றும் நண்பர்களுடன் 

உத்தமதானபுரம் விழாவில் மணி
வெவ்வேறு துறைகளில் பதிப்பிக்கப்பட வேண்டிய முக்கியமான சுவடிகள் குறித்துச் சொல்ல முடியுமா?

இதில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஏன் பதிப்பிக்கப்பட்ட சுவடிகளை நீங்கள் மீண்டும் பார்க்கக்கூடாது என்றுதான் கேட்பேன். திருக்குறள் அச்சுக்கு வந்துவிட்டது. ஆனால் 30 திருக்குறள் சுவடிகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலேயே உள்ளன. அவற்றை நீங்கள் ஒப்பிடக்கூடாது என்று யார் தடுத்தது. இன்று நாம் காணும் சுவடிகள் யாவுமே நூலாசிரியர்கள் கைப்பட எழுதியதா என்ன? உரையாசிரியர்கள் காலத்துக்கு முன்பே பாடல்களில் ஒரு மாற்றம் வந்திருந்தால், அதை நாம் இன்று கண்டுபிடிப்பதும் அரிது. என்னுடைய சுவடியியல் அறிவைக்கொண்டு முதல் குறளிலேயே மாற்றம் இருக்கக்கூடும் என்ற ஆய்வை முன்வைத்திருக்கிறேன். அதேபோல், 'செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலா தார்' என்பது இப்பொழுது வழக்கத்தில் இருக்கும் குறள். ஆனால், என்னுடைய கருதுகோள் ஆய்வின்படி, 'செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்குரிய செய்கலா தார்' என்பதாகும். இங்குக் க-கு எழுத்து வேறுபாட்டால் எவ்வளவு பெரிய பொருள் மாறுபடுகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். கருதுகோள் ஆய்வு நோக்கில் அவற்றையெல்லாம் சரி செய்யவேண்டும். 

சிதம்பர புராணம் என்ற நூல் அச்சாகி விட்டது. நானும் விட்டுவிட்டேன். ஒருநாள் எங்களுடைய சேகரிப்பில் இருந்த சுவடிக்கட்டை எடுத்து ஒப்பிட்டுப்பார்த்தால் பெயர் மட்டும்தான் ஒன்று. பாடல்கள் எல்லாம் வேறு. முற்றிலும் வேறொரு நூல், வேறுவொரு ஆசிரியரால் எழுதப்பட்டது. எல்லாரும் அறிந்த பரஞ்சோதியாரின் திருவிளையாடல் புராணத்திற்கு முன்பாக அதேபெயரில் வேம்பத்தூரார் திருவிளையாற் புராணம் வேறொன்று இருந்துபோல இருக்கலாமே. இதுபோன்ற சாத்தியங்களின் அடிப்படையில் சுவடிச் சேகரிப்பில் இருந்து செய்யவேண்டிய பல்வேறு பணிகள் உள்ளன.

சுவடிகளில் இருந்து பல இலக்கியங்கள் இன்னும் வெளியாகவில்லை. மருத்துவ நூல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இத்துறைக்கான படிப்பும் பணிவாய்ப்பும் பெருகாமல் வெறுமனே பதிப்பிக்கவேண்டிய நூல்களைப் பற்றி மட்டும் பேசி ஆவது ஒன்றுமில்லை. இதில் இருப்பவர்கள் மட்டுமே செயல்படவேண்டியதுதான். இதை மாற்றும் முயற்சியாகத்தான் எளிய முறையில் சுவடியியல் கற்பிப்பதையும் பயிற்சி கொடுப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறேன். உங்களது இரண்டு மணி நேரத்தை எனக்குக் கொடுத்தால் உங்களை ஓலைச்சுவடி வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும்

சுவடியியல் துறையில் அட்டவணைப்படுத்துதலின் தேவை என்ன?

அட்டவணைப்படுத்துவதே சுவடிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தத்தான். வெறுமனே நூலின் பெயரை மட்டும் சொல்லிச்செல்லும் அட்டவணை அல்ல, அது பட்டியல் மட்டுமே. நான் குறிப்பிடுவது விளக்க அட்டவணை. நூலில் என்ன என்ன செய்திகள் உள்ளன, நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன, பாடல்களில் விடுபடல்கள் உள்ளனவா, நூலின் தொடக்கமும் முடிவும், முற்குறிப்பு, பிற்குறிப்பு, அந்நூலின் ஆசிரியர் யார், சுவடி எழுதப்பெற்ற காலம் இதுபோன்ற விவரங்களை உள்ளடக்கியது விளக்க அட்டவணை. உதாரணமாக சுவடியின் முற்குறிப்பில் இச்சுவடி இவரால் இவருக்காக இந்தக் காலத்தில் எழுதுத் தொடங்கப்பட்டது என்று இருக்கும். பிற்குறிப்பில் இவருக்காக இவரால் இந்தக் காலத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்ற குறிப்பு இருக்கும். இதன் மூலம் நூலின் காலத்தை அல்ல சுவடியில் பிரதி செய்யப்பட்ட காலத்தை அறியலாம், எழுதப்பட எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது என்றும் அறியலாம். சுவடியை வாசிக்க முயற்சிப்பவர்களுக்கு இது மிகவும் உதவிகரமானது. சுவடியின் தேவையை எளிதாக கணிக்க உதவும்.

உதாரணமாக சிற்றிலக்கியங்களில் ஆர்வம் உள்ளவருக்கு, என்னென்ன சிற்றிலக்கியங்கள் சுவடிகளில் உள்ளன, அவற்றில் எவை முழுமையாக உள்ளன, கையிருப்பில் உள்ள படிகளில் மூத்தது எது, கையெழுத்து தெளிவானதாக உள்ளதா என்பது போன்ற தகவல்களை விளக்க அட்டவணையில் தெரிந்துகொண்டால், அவர் சுவடிகளை எளிதில் எடுத்து ஆய்வு செய்ய முடியும். இதைத் தயார் செய்வதிலும் பல சவால்கள் உள்ளன. ஒரு சுவடிக்கட்டைச் சரி செய்ய ஓரிரு நாட்கள் கூட எடுத்துக்கொள்ளும். பாட்டுகளாக இருந்தால் எண் வரிசை உதவும், உரைநடையென்றால் இன்னும் சிக்கல்கள் இருக்கும். இவற்றையெல்லாம் சரிசெய்தால்தான் அட்டவணைப்படுத்த முடியும்.

மருத்துவ கல்லூரி மாணவர்களுடன்

மாணவர்க்கு சுவடியியல் பயிற்சியில் 
சுவடிகளிலிருந்து நூலாக்கத்திற்குக் கொண்டு வரும் ஆரம்பக்கட்டக் காலத்தில் அப்போது வெளிவந்த பருவ இதழ்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளதும் அவை துணை இயக்கமாகவே சுவடிப்பதிப்பு வளர வழி வகுத்ததையும் உங்களது ஆய்வு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஆமாம். திருக்குறள் 1812ம் ஆண்டிலேயே ஞானப்பிரகாசன் மற்றும் எல்லீஸ் ஆகியோர் வெளியிட்ட இரண்டு வெவ்வேறு பதிப்புகளாக வந்துவிட்டது. குறிப்பாக, தொண்டமண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசத்தினசரிதையின் அச்சுக்கூடம், இங்கிலீசு ஆண்டு 1812 என்ற செய்தியால் சுவடிப்பதிப்பின் முதற்பதிப்பின் நிலையை அறியலாம். இதுதான் சுவடிப் பதிப்பின் தொடக்கம், அப்போதே சுவடியில் இருந்ததை அச்சுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற உந்துதல் நமக்கு வந்துவிட்டது. எல்லீஸ் பதிப்பில் பொருட்பால் மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்போடு வெளியிடப்பட்டது. பாடநூல்களாக இவற்றை அச்சேற்றம் செய்ய ஆர்வம் இருந்ததுதான் காரணம். ஆனால் அவர்கள் அப்போது பதிப்பிக்கையில் ஓலைச்சுவடியில் என்ன எழுத்துருக்கள் இருந்ததோ அதை அப்படியே அச்சுக்கோர்த்து எழுதினார்கள். சொல்லப்போனால் சுவடியில் இருந்த திருக்குறள் அதிலிருந்த எதுகை மோனை உதவியால் ஈரடியாக மட்டும் மாற்றப்பட்டு வேறு எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே சுவடியில் உள்ள எழுத்துப்படியே பதிப்பிக்கப்பட்டது. சீர்கள் கூட பிரிக்கப்படவில்லை, குறில் நெடில் வேறுபாடு இல்லை, மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி கிடையாது. பனையோலைக்குப் பதில் காகிதத்தாள்களில் அச்சிடப்பட்டது என்பதுதான் வேறுபாடாக இருந்தது.

1820க்குப் பிறகு தமிழ் இலக்கணம் பதிப்பிக்கப்படுகிறது. அடுத்து வரக்கூடிய பதிப்புகளில் வளர்நிலையில் சொற்களைச் சரிவர அமைக்கத் தொடங்கினார்கள். ஆனால் பருவ இதழ்களில் 1897ல் தான் சுவடிப்பதிப்புகள் வெளிவரத் தொடங்கின. அப்போது வெளிவந்த ‘உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை’ என்ற இதழில் காளமேகப்புலவரின் திருவானைக்காவுலா நூல் பதிப்பிக்கப்பட்டது. அதன் பிறகு பருவ இதழ்களில் அளவில் சிறிய சுவடி நூல்கள் தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டன. இவை அதிகமும் வெளியிடப்பட்டது அப்போது வெளிவந்த ஆதீன வெளியீடுகளிலும் தமிழ்ச்சங்க வெளியீடுகளிலும்தான். மதுரை தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழ், கரந்தை தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பொழில், டி. என் சேஷாச்சலத்தின் கலாநிலையம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் காப்பகத்தில் இருந்து வரும் அறிக்கைகள் இவையெல்லாம் தான் சுவடிப்பதிப்பில் பங்காற்றிய பருவ இதழ்கள். பெரிய நூல்கள் சுவடிகளிலிருந்து தனியாக புத்தகமாக போடப்படுகையில் அதிகமும் அச்சிடப்பட்ட வேண்டிய தேவை இருந்த காலத்தில் சிறிய நூல்களை இந்த பருவ இதழ்கள் பதிப்பிக்க ஆரம்பித்தன.

பெரிய நூல்களும் பருவ இதழ்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக பெருந்தொகையைச் சொல்லலாம். அப்போதெல்லாம் பெரிய நூல்களுக்காகவே தனியாகப் பருவ இதழ்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. இப்போது கம்பராமாயணம் இருக்கிறதென்றால் அதை மட்டுமே மாதந்திர இதழாக புத்தகமாக வெளியிடுவது. இதழின் பெயரும் கம்பராமாயணம் என்றே போடப்படும், பின்னர் நூல் தீர்ந்தவுடன் இதழும் நிறுத்தப்பட்டு விடும். அதுபோல புத்தகமாக ஆக்கப்படுவதெற்கென்றே பல பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகள் வந்துள்ளன. எப்படியென்றால் இப்போது ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் ஒரு தொடர் எழுதுகிறார், நீங்கள் அதை ஒவ்வொரு வாரமும் கத்தரித்து எடுத்து வைத்துக்கொள்கிறீர்கள். தொடர் நிறைந்தவுடன் அதை புத்தகமாக பைண்டிங் செய்து வைத்துக்கொள்கிறீர்கள் இல்லையா, அதுபோல பல சுவடி இலக்கியங்கள் 'புத்தகமாக' வெளிவர இந்தப் பருவ இதழ்கள் உதவியுள்ளன. அச்சிடும்போதே இதை மனதில்கொண்டு குறிப்பிட்ட சுவடிப்பதிப்பைத் தொடர்ந்து ஒரே வரிசை பக்கங்களில் வெளியிடுவது போன்று இதழ்களை வெளியிட்டிருக்கிறார்கள். மருத்துவ நூல்களும் இதுபோல தனி இதழ்களாகவும் இணைப்பாகவும் வெளிவந்துள்ளன.

பருவ இதழ்களில் பதிப்பான சுவடி நூல்கள் சில இன்னுமே தனிப்புத்தகமாக பதிப்பிக்கப்படாதவை. இதழ் வெளிவந்த காலத்தில் வாசித்தவர்களுக்கு மட்டுமே இந்த நூல் சென்று சேர்ந்திருக்கும். பின் காலப்போக்கில் பெயரளவில் மட்டுமே அது இருக்கும். எங்காவது நூலகங்களில், இந்தப் பருவ இதழ்கள் இருந்தால் அதை மீண்டும் வெளிக்கொண்டு வரலாம். ஒருவேளை அந்தச் சுவடி இப்போது கிடைக்காவிட்டால் நமக்கு அந்த இதழ்கள் மட்டுமே மூலப்பிரதியாக இருக்கும்.

என்னுடைய ஆய்வில் நான் எனக்குக்கிடைத்த 36 வகையான இலக்கியப் பருவ இதழ்களில் இருந்து 408 நூல்கள் வெளியிடப்பட்டதைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறேன். இந்த 408 நூல்களும் முதலில் ஏதோ ஒரு பருவ இதழில் தான் சுவடியில் இருந்து அச்சாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. என்றாலும் இவற்றில் 184 நூல்களுக்கான சுவடிகளும் கிடைக்காமல் பருவ இதழ்களில் மட்டுமே இருப்பதை இவ்வாய்வேடு உறுதிப்படுத்தியிருக்கிறது. இவையன்றி வேறு இலக்கிய இதழ்களும் இருந்திருக்கலாம். மருத்துவம் சோதிடம் முதலிய துறை நூல்களை நான் கணக்கில் கொள்ளவில்லை. அவற்றையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூடும்.


ஓலைச்சுவடிகளில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் குறித்து சொல்லமுடியுமா ?

ஓலைச்சுவடிகளில் மட்டும் என்றல்ல, தற்போதும் உங்கள் வீட்டிலுள்ள பத்திரங்களில்கூட இந்தக் குறியீடுகளைக் காணலாம். 'மேற்படி' என்றால் அதற்கு ஒரு குறியீடு உண்டு, வருடம் என்ற சொல்லுக்கு அதேபோல ஒரு குறியீடு உண்டு. பெரும்பாலான ஆவணங்களில் இதுபோன்ற குறியீடுகள் நெடுங்காலம் புழங்கி வந்துள்ளன. ஓலைச்சுவடி குறியீடுகளில் கூட்டெழுத்துக்களுக்கு எழுத்துக் குறியீடுகளும் சொற்களுக்கான சொற்குறியீடுகளும் உண்டு. நெல் என்னும் சொல்லுக்குக் குறியீடு உண்டு. பஞ்சாங்கத்தில் வருடம் இன்னும் குறியீடாக பதிப்பிக்கப்படுகிறதே. அக்காலத்தில் வழங்கிய வீசம், பலம், மணங்கு, குழி முதலிய அளவை முறைகளுக்குக் குறியீடுகள் உள்ளன. இவற்றில் முழு எண் அளவைகளும் பின்ன எண் அளவைகளும் உள்ளன. இவையெல்லாம் உங்களுக்கு இலக்கியச் சுவடிகளில் வராது, நில அளவைகள், மருத்துவம் முதலிய சுவடிகளில் தான் இவற்றை அதிகமாகக் காண முடியும்.

ஆவணங்கள் குறித்து இன்னும் சொல்வதானால் ஓலைச்சுவடிகளில் முதலில் எழுதிக்கொண்டு தான் கல்லில் அல்லது செம்பில் வெட்டுவார்கள், வெட்டிய பிறகு ஓலையைக் கிழித்து விடுவார்கள். அதற்கு காரணம் போலி ஆவணங்களைத் தவிர்ப்பதுதான். அன்றிலிருந்து இன்றுவரை வருவாய் குறித்த ஆவணங்கள், உரிமைப் பத்திரங்கள் அனைத்தும் ஒற்றைப் பிரதியோடு இருப்பதற்கு இதுவே காரணம். இவற்றுக்குப் வேறு படிச்சுவடிகள் இருக்காது. 

நீங்கள் பதிப்பித்த சுவடிகளில் நாட்டார் தெய்வங்களுக்கான புலைமாடத்தி வரத்து முதலிய கதைப்பாடல்கள் உள்ளன. புலவர்களின் இலக்கியங்கள் போலல்லாத இந்தக் கதைப்பாடல்கள் எப்போது சுவடிகளில் எழுதப்பட்டன.

கிட்டத்தட்ட 250க்கும் மேலான கதைப்பாடல்கள் சுவடியில் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அச்சாக்கம் செய்யப்படவில்லை. அந்தக் காலத்தில் வந்த பெரிய எழுத்துக் கதைகள் எல்லாமே இந்த நாட்டார் கதைகளில் இருந்து வெளிவந்தவை தான். அந்தந்தப் பகுதிகளில் வழங்கிய இந்தக் கதைகளை வட்டார வழக்கிலேயே சுவடிகளில் எழுதி வைத்திருக்கின்றனர். வாய்மொழியாக வழங்கிய இப்பாடல்களைப் பாடுவோர் குறைந்துபோன காலத்தில், இதை ஏட்டில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம். இக்கதை மறைந்துவிடக்கூடாதே என்ற தவிப்பு யாருக்கோ இருந்திருக்கிறது. வாய்மொழி இலக்கியம் உருமாறி உருமாறி ஏட்டுக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. இவற்றின் கதைக்கரு பெரும்பாலும் அப்படியே இருக்கும். நான் பதிப்பித்த மூன்று கதைப்பாடல்களில் சின்னத்தம்பி கதை என்று ஒன்று உள்ளது, அதைப்படித்து விட்டு சென்னை போரூர் பகுதியில் இருந்து ஒருவர் என்னை அழைத்தார். அவர் அந்தச் சின்னத்தம்பியின் வாரிசு வழியில் வந்தவர். கதையில் உள்ள அந்தக் குடும்பம் நிகழ்காலத்தில் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது கதைப்பாடல்கள் முழுக்க பொய்யென்று யாரும் ஒதுக்கிவிடமுடியாது. சுவாரஸ்யத்திற்காக புனைவு கலக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் கதைக்கருவில் உண்மை உண்டு.

திருநெல்வேலி அருகே குரங்கணியில் முத்துமாலையம்மன் கோவில் உள்ளது, அந்த ஊரில் தற்போது வழங்கும் கதை என்னெவென்றால், இராவணனால் சீதை சிறையெடுக்கப்படுகையில் அவளது கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையின் முத்துக்களை ஒவ்வொன்றாக அடையாளத்திற்காக வீசிக்கொண்டே போனாள். அதில் ஒன்று குரங்கணியில் விழுந்து ஒளிவீசியது. அதைக் கண்டு அங்கு வந்த பனையேறி ஒருவர் அதன் ஒளியைக் காணமுடியாமல் அதன் மீது ஒரு சட்டியை கவிழ்த்து அதை பிடித்து வைத்தார். அதுவே நாளடைவில் சீதை அம்மன் கோவிலாக மாறியது. ஆனால் அதே முத்துமாலையம்மனுக்குக் கதைப்பாடல் ஒன்று உள்ளது. அதிலுள்ள நில வர்ணணை அனைத்தும் தற்போதுள்ள கோவிலைச் சுற்றியுள்ள இடங்களோடு ஒத்துப்போகிறது. ஆனால் அதில் வழங்கும் கதை வேறு. தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வந்த கதையை யாரோ ஒருவர் ஏட்டில் எழுதி வைக்கிறார். அப்படி தோன்றியதுதானே இன்றைய இதிகாசங்கள், அதுபோல நாட்டார் கதைகளும் ஒருநாள் மாறக்கூடும். 

நாட்டார் பாடல்களின் கதைப்பாடல்கள் வட்டார சார்பு உள்ளவை. தெற்கே மாயக் கதைகளும் பேய்க் கதைகளும் அதிகம். மக்களின் விருப்பத்திற்கேற்ப கதைகள் புனையப்பட்டிருக்கலாம். பேரிலக்கியங்களில் இருந்து கிளைத்துச் செல்லும் கதைகள் கூட நாட்டார் கதைகளாக மாறியிருக்கின்றன. பெரும்பாலும் விழாவில் பாடக்கூடிய நேர வரையறைக்குட்பட்ட கதைகள் இவை.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு இறந்தான் என்று ஆங்கிலேயரின் ஆவணங்கள் சொல்கின்றன. அவன் இறக்கவில்லை தப்பிவிட்டான் என்று கதைப்பாடல் ஒன்று சொல்கிறது. கதை நிகழ்வு நடந்த 50 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டது. அப்போதிருந்த வழக்கிலிருந்த வாய்மொழிக் கதைகள் தான் எழுதப்பட்டன. எது உண்மை என்ற ஆய்வுகள் வரலாற்று ஆசிரியர்களுக்கானவை. வென்றவரா தோற்றவரா யார் தரப்பை நம்புவது என்பது பிறகு. ஆனால் கதைப்பாடல்கள் மக்களது தரப்பைப் பதிவு செய்கிறது என்பதுதான் முக்கியமானது. 

அதேபோல் கட்டபொம்மனின் சகோதரியாக முத்துநாச்சியாளை அடையாளப்படுத்தும் ஒரு கதைப்பாடலும் உண்டு. கட்டபொம்மனுக்காக ஆங்கிலேயரை இவள் எதிர்த்து ஒருநாள் சண்டை இட்டதை முத்துநாச்சிச் சண்டை என்றும் கதைப்பாடல் சுவடி எடுத்துரைக்கிறது. வரலாற்றில் எங்கும் காணமுடியாத பாத்திரம் முத்துநாச்சி. கதைப்படி கட்டபொம்மனின் தங்கை அவள். ஜெகவீர பாண்டியனின் கடைசி மகள். அவள் கட்டபொம்மனுக்காக வெள்ளையரோடு போரிடுகிறாள். அவளது சண்டை பெண்களது போர்முறையாக இருக்கிறது. பெண்களை, கூழ் காய்ச்சி கோட்டை மீது ஏற முயற்சிப்பவர் மீது ஊற்றச் சொல்கிறாள். உண்மையில் அப்படிச்செய்தால் தோலெல்லாம் வெந்துபோய்விடும் என்பது உண்மை. இதனை இந்தக்கதைச் சுவடி எடுத்துரைக்கிறது.

உங்களுடைய பண்பாட்டுப் பதிவுகளும் முக்கியமானவை, தறிபுகுதல் குறித்து நீங்கள் எழுதியது வேறெங்கும் பதிவாகாத செய்தியாக இருக்கிறது.

நான் பிறந்த ஊரில் தைப்பொங்கலுக்குப் பிறகு நெசவாளர்கள் கொண்டாடும் ஒரு விழா தறிபுகுதல். நாட்டுப்புறப் பண்பாட்டில் நெசவு சார்ந்த இதுபோன்ற தகவலெல்லாம் பதிவாகவே இல்லை. எனது சிறுவயதில் நான் கைத்தறி புகுந்திருக்கிறேன், அன்று கைத்தறி இருந்தது. இன்று இயந்திரத்தறி. பெரும்பொங்கலில் இருந்து எட்டாம் நாளாக மயிலேறி என்ற நாள் வரும். அதற்கடுத்து வரக்கூடிய நல்ல நாளில் தறி புகுவார்கள். அதாவது, அவ்வருடத்தில் கடவுளை வணங்கி புதிதாக நெசவு செய்யத் தொடங்கும் சடங்கு. அதுவரை யாரும் தறி நெய்யமாட்டார்கள். நெசவு சார்ந்த பாவு போடுதல் முதற்கொண்ட அனைத்து செயல்களுக்கும் தை மாதம் புதிதாகத் தொடங்கும் விழாவாக இது இருந்தது. இப்போது பொங்கலன்றே தறி ஓடுகிறது, சடங்குக்காக தறிபுகுதல் என்று பெயரளவில் நடக்கிறது. எனது நினைவிலிருந்து அன்று புழங்கிய நெசவு சார்ந்த சொற்களையும் தொகுத்து அகராதி போல எழுதி வெளியிட்டிருக்கிறேன். இயந்திர தறி வருகையால் பழைய தொழில் சார்ந்த சொற்கள் பயனில்லாமையால் மடிந்து போய்விட்டன. நான் ஒரு காலத்தில் ஈடுபட்ட தொழில் கைத்தறி. இதையெல்லாம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும் என்று நினைத்துப் பதிவு செய்திருக்கிறேன்.

முன்பு சுவடிகள் படி எடுக்கப்பட்ட முறைகள் எப்படி இருந்தது?

தரங்கம்பாடியில் வெள்ளையர்கள் குதிரைகளுக்குக் கொள் வேக வைக்க ஓலைச்சுவடிகளை எரியூட்டப்பெற்றதாக ஒரு குறிப்பு இருக்கிறது. பனை ஓலை ஒன்றும் விறகல்ல நின்று எரிவதற்கு. உடனே சாம்பலாகி விடும். இவர்களிடம் எவ்வளவு குதிரைகள் இருந்ததோ அவ்வளவு குதிரைகளுக்கும் கொள் வேகவைக்கப்பட்டது. அப்படி குதிரைக்கொள்ளுக்காக எரிந்த இலக்கியங்களின் எண்ணிக்கை நமக்குத்தெரியாது.

பல சமயங்களில் ஓலைச்சுவடி எழுதுபவருக்கு எழுத மட்டுமே தெரியும். அவருக்கு இலக்கிய அறிவோ மருத்துவ அறிவோ இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் கூலிக்கு வேலை செய்தவர்கள், மூலத்தை அப்படியே படியெடுத்தல்தான் அவர்களுடைய திறன். எழுதுகையில் மூல பாடத்தை எப்படி புரிந்துகொள்கிறாரோ அப்படித்தான் அவர் எழுதுவார்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை வேகமாக பாடல் புனையக் கூடியவர். அவர் சுவடியில் எழுதவில்லை, அவருடைய மாணவர்கள்தான் ஓலையில் எழுதுவார்கள். அவர் சொல்லும் வேகத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர் எழுதினால்தான் அதைப் பின்னர் வரிவரியாக பிரித்துக்கொண்டு எழுதி முடிக்க முடியும். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 50,000 பாடல்கள் தம் கைப்பட எழுதியவர். நாமறிய அவர் ஒருவரே தன் கைப்பட எழுதினார் எனலாம். பனை ஏடெழுதிய கடைசி இலக்கியவாதி அவர்தான். இப்படிப் பல வகைகளில் சுவடிகள் எழுதப்பட்டுள்ளன.

இன்றைய தொழில்நுட்பமும் மாறிக்கொண்டே இருக்கிறது, அதன் உருமாற்றத்தை நாம் உடனே கைக்கொள்ள வேண்டிதாய் இருக்கிறது. இன்று ஃபிளாப்பியைப் படிக்க நமது கணிப்பொறியில் வசதியில்லை. மைக்ரோ ஃபிலிம் போன்ற ஒளிநாடாக்களைப் படிக்க பெருநிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. பழைய தொழில்நுட்பங்கள் அயலாகையில் ஒவ்வொரு கால கட்டத்தைச் சேர்ந்த தரவுகளையும் பத்திரமாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டியதாக இருக்கிறது.


வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குறித்து சொல்ல முடியுமா?

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய சுவடிகள் 54 சுவடிக்கட்டுகளாக கிடைக்கின்றன. 50,000க்கும் மேற்பட்ட பாடல்களில் 1224 வகையான வெவ்வேறு இலக்கியங்களைப் பாடியுள்ளார். தமிழில் அதுவரை ஐந்திலக்கணம் மட்டுமே வழக்கிலிருக்கையில் ஆறாவது இலக்கணமாக எழுத்தினுடைய வரிவடித்திற்கும் குறியீடுகளின் வரிவடிவத்திற்கும் இலக்கணத்தைக் கொடுக்கிறார். தொல்காப்பியர் காலத்திலிருந்து வரிவடிவத்திற்கு யாரும் இலக்கணம் எழுதவில்லை. அது மாறிக்கொண்டேதான் வந்துள்ளது. தண்டபாணி சுவாமிகளோ ஒலிப்பு முறைக்கு ஏற்ப எழுத்தின் வரிவடிவத்திற்கு முதலில் இலக்கணம் வடிக்கிறார். தன்காலத்தில் இருந்த, தான் கேள்விப்பட்ட புலவர்களைக் குறித்துப் புலவர் புராணம் பாடியவர் சுவாமிகள். நடைபயணமாக சென்ற இடங்களில் தான் கண்ட கோவில்களைப்பாடி வைத்திருக்கிறார். பாடல் பாடியிருக்கிறார். கோவை கௌமாரமடம் தற்போது அவரது சுவடிகளைச் சிறிது சிறிதாக நூல்களாக வெளியிட்டு வருகிறது.

சுவடிப்பதிப்பில் பாடபேதங்களால் பொருள் வேறுபாடுகளால் சர்ச்சைகள் எழுந்திருக்கிறதா?

இதை நாம் பருவ இதழ்களிலேயே பார்க்க முடியும். மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார் என்று இருவர் இருந்தனர். இருவரும் உறவினர்கள். மாமன் மச்சான் முறை. பெயரும் ஒன்றேதான். இருவரும் பாண்டித்துரை தேவர் நிறுவிய நான்காம் மதுரை தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றினர். ஒரு இதழில் மு. இராகவையங்கார் ஒரு கருத்து எழுதினால் அடுத்த இதழில் இரா. இராகவையங்கார் அதை மறுப்பார். அடுத்த இதழில் மு. இராகவையங்கார் அதற்கு விளக்கம் கொடுப்பார். இப்படிப்போகும். பதிப்பிப்பவர் நூலாசிரியர் நிலையில் இருந்து யோசித்து பதிப்பிப்பதுதான் எப்போதும் சிறந்ததாக இருக்கமுடியும். பதிப்பாசிரியர் நோக்குக்குப் பதிப்புகளைக் கொண்டு செல்வதில்தான் பெரும்பாலும் சிக்கல்கள் எழுகின்றது. சுவடிகளில் உள்ள பிழைகளும், தொடர்ச்சியின்மையும்கூட இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. படி எழுதுபவர்களின் தன் சொந்த சரக்கை இடைபுகுத்துபவர்களும் இருப்பார்கள். பெரும்பாலும் எந்தப் பிரதி மூலபாடத்திற்கு மொழியால் காலத்தால் அணுக்கமாக உள்ளதோ அதை இறுதியாக எடுத்துக்கொள்வது வழக்கம். 

உங்கள் களப்பணி அனுபவங்களை சொல்லுங்களேன்.

பல்வேறு அனுபவங்கள் உண்டு. ஒருமுறை பெரிய விபத்தில் சிக்கி மீண்டேன். சுவடிகளைக் கண்ணால் கண்டால் விட்டுவிட என்னால் முடியாது. பலமுறை அலைந்து சுவடிகளைப் பெற்றிருக்கிறேன். ஊத்துக்கோட்டை தண்டரை வைத்தியர் வீட்டில் சுவடிகள் இருந்தன. அவற்றை அவர்கள் தருவதாக இல்லை. அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் புழக்கடையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். வீட்டாரிடம் அனுமதி பெற்று அவர்களிடம் போனேன். அவர்களுக்குக் காதுகேட்கவில்லை, சைகைதான். அன்று எனது பிறந்த நாளும் கூட. அவரது காலில் விழுந்து ஆசி கேட்டேன். சைகையில் என்னைக் குறித்து கேட்டார்கள். என்னை அவர்கள் அருகில் உட்கார வைத்துக்கொண்டார்கள். எந்த ஆசாரமும் பார்க்கவில்லை. எதற்கு வந்தாய் என்று கேட்டார்கள். நான் ஓலை தேடி வந்ததை வீட்டார் உதவியுடன் சைகையில் சொன்னேன். ஒரு ஆணை போல ‘குடுடா… இவன் நம்ம பிள்ளைடா’ என்றார்கள், மறுபேச்சில்லை, ஓலைசுவடிகள் கிடைத்தன.

மாணவர்களுக்கு சுவடியியல் பயிற்சியில் மணி
தொடர்ந்து கற்பிக்கிறீர்கள், உங்களுடைய முறைகள் என்னென்ன?

எழுதுபொருள், எழுதப்படும் பொருள், எழுது கருவி இம்மூன்றும் இணைந்தால்தான் நாம் உருவாக்கும் எழுத்து நமக்கு எழுத்துக்களாகி வரும். எழுதும் கோணமும் படிக்கும் கோணமும் வேறு வேறு. எழுதும் எழுத்து வடிவத்தில் நாம் படிக்கும் எழுத்தின் வரிவடிவம் இருப்பதில்லை. நாம் வாசிப்பதற்கேற்பத்தான் எழுதுகிறோம், இப்படி அனிச்சைச் செயலாக எழுதப் பழகிவிட்டோம். குறில் எழுத்துக்களை நெடில் எழுத்துக்களில் பார்க்கலாம். சில எழுத்துக்களை அப்படி பார்க்க முடியாது, இதுதான் நமது வரிவடிவ மாற்றத்தின் உதாரணம். குறில் வரிவடிவத்தின் ஈற்றின் ஒரு சிறு மாற்றம் காட்டப்பெற்றிருப்பதே நெடில் என்போம். ஆனால் ஒருசில எழுத்துகளுக்கு இவ்விதி தற்காலத்தில் பொருந்தவில்லை என்றாலும் ஓலைச்சுவடிகளில் கு-வின் நெடில் வடிவம் கு-வின் ஈற்றில் சுழிக்கப்பட்ட வடிவங்களையும் காணமுடிகிறது.

த என்பதில் க-வும், ச-வும் உள்ளது. கவுக்கும் தவுக்கும் ச தான் அடிப்படை. அதுபோல த-வில் என்பதில் ந இருக்கிறது. இப்படி எளிமையாக பயிற்றுவிப்பதுதான் எனது முறை. தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன, இதை எழுத 18 வகையான வரிவடிவங்களை நாம் அறிந்திருந்தால் போதும். அதைக்கொண்டு 247 எழுத்துக்களை எழுதிவிடலாம். மேலும், ஓலைச்சுவடியில் எழுத்து கீறும் முறையில் எழுதுவதால், எழுத்துக் கீறகீற ஓலை நகரும் என்பதால், இம்முறையில் எவ்வாறு தமிழ் எழுத்துக்கள் அமையும் என்பதை என்னுடைய சுவடி எழுத்துக் கற்பித்தல் முறையில் பயன்படுத்துகிறேன். இந்தக் கற்பித்தல் முறையை 30 வருடங்களுக்கு முன்பு நான்தான் உருவாக்கினேன். இப்போது அனைவரும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இது எனது கற்பித்தல் முறைக்கு கிடைத்த வெற்றி. என்னுடைய பெயரை அவர்கள் அடையாளப்படுத்தவில்லை என்றாலும் பிறர் அவற்றைப் பின்பற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி.



இந்தத்துறையில் ஈடுபட பல்வகைப்பட்ட அறிதல்கள் தேவைப்படுகின்றன. இப்போது இத்துறை அடைந்துள்ள வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்?

கல்வெட்டுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அரசு சுவடிகளுக்கும் தரவேண்டும், அகழாய்வுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை சுவடியியலுக்கும் தரவேண்டும். இது எனது ஆதங்கம். இந்த மோகம் மக்களுக்கும் இருக்கிறது, தமிழருடைய படைப்புக்கள் 90% இந்தச் சுவடிகளில்தான் உள்ளன என்பதை மறந்து விடுகிறார்கள், இத்துறையையே கைவிட்டு விடுகிறார்கள் என்பது வேதனைக்குரியது. உங்களுடைய இலக்கியங்கள் எல்லாமே இந்த ஓலைகளிலிருந்து கிடைத்தவைதானே. ஒருவகையில் உங்கள் மொழிப் பெருமிதமெல்லாம் இவற்றின் மூலமாக கிடைத்ததுதானே. அப்படிப் பார்க்கும்போது இந்தச் சுவடிகளைப் பாதுகாப்பதில் அரசு இன்னும் எவ்வளவு கவனமாய் இருக்கவேண்டும். மீதமுள்ள பொக்கிஷங்களை எல்லாம் வெளிக்கொண்டுவர இதில் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.

ஓலைச்சுவடியில் தூசி சேர்வது, அதற்குள் சிற்றுயிர்களைத் தோற்றுவிக்கும். அதற்கு ஓலை உணவாகிவிடும், அவற்றின் எச்சம் சுவடிகளுக்கிடையில் ஒட்டிக்கொள்ளும். பல வருடங்களாக உறங்கிக்கிடக்கும் சுவடிகள் பாதுகாக்கப்படாவிட்டால் இவையெல்லாம் நடக்கும். இந்த விழிப்புணர்வு இருந்திருந்தால் எவ்வளவோ அழிவுகளைத் தடுத்திருக்கலாம். இனியாவது எஞ்சியவற்றைக் காக்க வேண்டும். இன்னும் பதிப்பிக்கப்பட வேண்டிய சுவடிகள், மீளாய்வு செய்யப்பட வேண்டிய சுவடிகள் எவ்வளவோ உள்ளன. இன்னும் நூறாண்டுக் காலம் பல நூறு அறிஞர்கள் செய்ய வேண்டிய நூல் தொகை நம்மிடம் உள்ளது. இவ்வளவு மருத்துவச்சுவடிகள் உள்ளதே, சித்த மருத்துவப் பாடத் திட்டத்தில் சுவடியியல் உண்டா? சித்த மருத்துவர் ஒருவர் சுவடி வாசிப்பாரா? இல்லையே. இந்நிலை எல்லாம் மாறவேண்டும். கடந்த முப்பது வருடத்தில் கணிப்பொறியியல் துறை எவ்வளவோ வளர்ந்துவிட்டது, வேலைவாய்ப்புகள் அதற்கான காரணம். சுவடியியல் துறையிலும் வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும். மாணவர்களுக்கும் இத்துறைமீது ஆர்வம் வரும். இந்தத் துறையின் வருங்காலத்தை மேலும் நம்பிக்கை கொண்டதாக்கலாம். 

நேர்காணல்: தாமரைக்கண்ணன் புதுச்சேரி

மோ.கோ. கோவைமணி - Tamil Wiki


தாமரைக்கண்ணன் புதுச்சேரி